கட்சியின் செயல்பாடுகள் குறித்து தொண்டர்கள் யாரும் பொதுஇடங்களில் கருத்து தெரிவிக்கக்கூடாது என்று முதல்வர் பழனிச்சாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும், தற்போதைய இரட்டை தலைமையால், முடிவுகளை உடனுக்குடன் எடுக்க முடியவில்லை ; இதுவே தேர்தல் தோல்விக்கு காரணம் . ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவரே அதிமுக தலைமை பதவியை ஏற்க வேண்டும் என மதுரை முன்னாள் மேயரும், மதுரை மாவட்ட அதிமுக நிர்வாகியுமான ராஜன் செல்லப்பா கருத்து தெரிவித்திருந்தார்.
ராஜன் செல்லப்பாவின் கருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருந்த நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ராணுவ கட்டுப்பாட்டுடன் செயல்படும் ஒப்பற்ற இயக்கம். தலைமைக்குமள், கொள்கைக்கும் என்றென்றும் விசுவாசமாய் செயல்படும் தொண்டர்களை கொண்ட நிகரில்லாத இயக்கமென்று எல்லாரும் நம்மை பார்த்து வியந்தார்கள். நம் எதிரிகளும் கூட நம்மைப்போல் இருக்கமாட்டார்கள்.
கடந்த சில நாட்களாக கழக உடன்பிறப்புகள் சிலர் கழகத்தின் செயல்பாடுகளை பற்றியும், இனி என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டு வரும் கருத்துக்கள் அவ்வளவு வரவேற்கத்தக்கவையாக இல்லை. கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் கழகத்தின் மீது அளப்பரிய அன்பும், பற்றும் இருக்கிறது என்பதையும், அந்த உணர்வுகளின் காரணமாகத்தான் இத்தகைய கருத்துக்களை கூறிவருகின்றனர் என்பைதயும் மறுப்பதற்கில்லை. இருந்தாலும் இடம், பொருள், ஏவல் அறிந்து நாம் செயல்பட வேண்டும்.
ஊர் இரண்டுபட்டால், யாருக்கு கொண்டாட்டம் என்பைத எல்லோரும் நன்கு அறிந்து வைத்திருக்கிறோம். நம்மை அழிக்க நினைப்பவர்களுக்கும், ஒருநாளேனும் முதலமைச்சர் பதவியில் அமர்ந்துவிட வேண்டும் என்ற பித்தம் தலைக்கேறியவர்களாய் பிதற்றிக் கொண்டிருப்பவர்களுக்கும் நம்முடைய சொல்லும், செயலும் உதவி செய்திடக்கூடாதல்லவா?
கட்டுப்பாடும், ஒழுங்கும் கட்டாயம் நமக்கு தேவை. இவை சாதாரரணமானவைதான். ஆனால், இம்மாதிரி சாதாரண விஷயங்களை கொண்டுதான் ஓர் இயக்கத்தை உலகம் எடைபோடும். கழகத்தின் நலன்கருதி சில கருத்துக்களை யார் கூறவிரும்பினாலும், அதற்கென ஒரு நேரமும், சந்தர்ப்பமும் செயற்குழு - பொதுக்குழு ஆலோசனைக்கூட்டம் என்று பல்வேறு வாய்ப்புகளும் இருப்பதை அன்புகூர்ந்து நினைவில் கொள்ளுங்கள்.
நம்முடைய பொதுவாழ்வு என்பது புனிதமானது. அரசியல் மூலம் நாம் வேண்டுவது சில்லரைப் பதவிகளையல்ல, சிங்கார வாழ்வையல்ல. நம் இனத்தின் விடுதலையை நாம் தேடுகிறோம். அந்த தேடலில், நமக்கு துணை செய்யவ பதவியும், அரசும் என்பதை அறிந்திருக்கிறோம். நாம் ஒருதாய் மக்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். கழகத்தின் கடைசித்தொண்டனின் உணர்வுகளையும் அவனது எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் தான் நம் பணிகள் அமைந்திருக்கின்றன.
கழக உடன்பிறப்புகள், இனி கழக நிர்வாக முறைகளைப்பற்றியோ, தேர்தல் முடிவுகளைப் பற்றிய தங்கள் பார்வைகளைப்பற்றியோ, கழகத்தின் முடிவுகளை பற்றியோ, பொதுவெளியில் கருத்துக்களை கூறாமல் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலில் செயல்பட்டதைப்போன்றே தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.