அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 17) தீர்ப்பு வழங்கியுள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் கட்சியை சசிகலா கைப்பற்ற நினைத்தார். இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறைக்கு சென்றார்.
தொடர்ந்து கட்சியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. முன்னதாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். ஓ.பன்னீர் செல்வமும் அவரது ஆதரவாளர்களும் தர்ம யுத்தம் நடத்தினர்.
இதையடுத்து கட்சியில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. முதலமைச்சராக தொடர்ந்த எடப்பாடி பழனிசாமி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும், துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓ. பன்னீர் செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டுவந்தனர்.
இந்த நிலையில் இருவருக்கும் இடையே அதிகாரப் போட்டி ஏற்பட்டது. தொடர்ந்து ஜூலை 11ஆம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டப்பட்டது. இதற்கு ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் வகித்துவந்த பதவிகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டன.
கட்சியின் பொருளாளர் பதவியும் பறிக்கப்பட்டு அந்த இடத்திற்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். மேலும் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆதரவும் எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுகவின் வைரமுத்து ஆகியோர் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவருக்கு பக்க பலமாக மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் செயல்பட்டனர்.
முன்னதாக பொதுக்குழு கூட்டதுக்கு தடை விதிக்க தனி நீதிபதி மறுப்பு தெரிவித்துவிட்டார். இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் கருத்து எதுவும் கூறாமல் வழக்கை விரைந்து விசாரிக்க உயர் நீதிமன்றத்துக்கு ஆணையிட்டது.
இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அப்போது அதிமுக பொதுக்குழு செல்லாது என நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். இது எடப்பாடி பழனிசாமிக்கு பெருத்த பின்னடைவு என்று பார்க்கப்படுகிறது.
ஏனெனில் அவர் வகித்த இடைக்கால பொதுச்செயலாளர் பதவியும் பறிபோகும் நிலையில் உள்ளது. மேலும் மீண்டும் கட்சி ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., என இரட்டை தலைமை கட்டுப்பாட்டில் வரும் என்றே தெரிகிறது.
ஏனெனில், மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடத்தி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளர் ஆக ஓ. பன்னீர் செல்வம் சம்மதிக்கமாட்டார்.
மேலும் இருவரும் மீண்டும் இணைந்த செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் தனது உத்தரவில், கடந்த கால நிலைபாடே கட்சியில் தொடர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டுமே எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கும். இதற்கிடையில் அதிமுக எம்பியும் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனான எம்.பி ரவீந்திரநாத், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான் எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி முடிசூட்டிக்கொள்ள கட்சியின் சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களும் தற்போது செல்லாததாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil