திருச்சி மாநகராட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாரிஸ் தியேட்டர் ரயில்வே பாலம் 157ஆண்டு பழமையானதாகும். இதனையடுத்து ரூ.34.10 கோடி மதிப்பீட்டில் புதிய பால கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது. ஆனாலும் கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக குற்றம் சாட்டி அ.தி.மு.க.,வினர், திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் வகையில் கடுமையாக வரி உயர்த்தப்பட்டுள்ளது, மக்களின் அடிப்படை தேவைகளான சாலை, குடிநீர் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, திருச்சி மரக்கடை, எம்.ஜி.ஆர் சிலை அருகே திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ .சீனிவாசன் தலைமையில், சுமார் 500க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர் போலீசாரின் அனுமதியின்றி இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், மாநில ஜெயலலிதா பேரவைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று திருச்சி மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கண்டன உரையாற்றினார்.
காவல்துறை அனுமதி இன்றி இந்தப் போராட்டம் நடைபெற்றதால் போலீசார் ஆர்.பி. உதயகுமார், மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் அ.தி.மு.க.,வினரை கைது செய்ய முற்பட்டனர். அப்போது ஆர்.பி. உதயகுமார் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
பின்னர் ஆர்.பி உதயகுமார், ஜெ சீனிவாசன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“