வீடு தேடி வந்த அதிர்ஷ்டம்... ராஜ்யசபா எம்.பி ஆகும் 'தர்மயுத்தம்' தர்மர்!
அ.தி.மு.க.வில் மட்டுமே இந்த அதிசயங்கள் நடக்கும். ஆம். ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூரில் உள்ள தனது வீட்டில் இருந்தவருக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது அ.தி.மு.க.வின் இரட்டைத் தலைமை .
தீவிர ஓ பி.எஸ்சின் ஆதரவாளராகவும், ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர் ஒன்றிய செயலாளராகவும் இருந்தவர் தர்மர் . இவர். ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளராகவும் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். தற்போது முதுகுளத்தூர் ஒன்றிய குழு தலைவராகவும், அதிமுக ஒன்றிய செயலாளராகவும் உள்ளார். இவர் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது உடனிருந்து முதன்முதலில் அனைத்து உதவிகளும் செய்ததாக தகவல் . ஆதலால் இவருக்கு தர்மயுத்தம் தர்மர் என்று பெயரும் உண்டு.
Advertisment
இரண்டு முறை தொடர்ந்து அதிமுக.வின் ஒன்றிய செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். ஜெயலலிதா இருந்த போது மாவட்ட செயலாளராக இருந்த இவருக்கு 2 முறை எம்.எல்.ஏ . பதவிக்கு சீட் கேட்டும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஜெயலலிதாவிற்கு பின் ஓ.பி.எஸ்சின் தீவிர ஆதரவாளராக தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளார். ஓ.பி.எஸ். தர்மயுத்தம் துவங்கிய போது முதல் ஆளாக நின்று அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று தர்மர் செய்துள்ளார். இதனால் இவருக்கு தர்மயுத்தம் தர்மர் என்றே கட்சியினர் அழைத்து வந்துள்ளனர். இவர் எம்.பி. சீட் குறித்து ஓ.பி.எஸ்.சிடம் கோரிக்கை வைத்ததுடன் அதனை மறந்தும் விட்டாராம். சீட் கேட்பது குறித்து கட்சியினர் சென்னைக்கு அழைத்தும், அங்கு செல்லாமல் கடைசிவரை அவர் வீட்டிலேயே இருந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி தனது மனைவி கீர்த்திகா முனியசாமிக்கு இந்த ராஜ்யசபா எம்பி பதவியை கேட்டிருந்த நிலையிலும்கூட ஒன்றிய செயலாளர் தர்மருக்கு சீட் கிடைத்துள்ளது.
மேலும் ராஜ்யசபா சீட்கள் இரண்டையுமே தனது ஆதரவாளர்களுக்கு இபிஎஸ் கேட்டு வந்த நிலையில் ஓபிஎஸ் போராடி இந்த பதவியை பெற்று கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தென்மாவட்டத்தில் உள்ள ராஜ் சத்யன், தச்சை கணேஷ் ராஜா, கீர்த்திகா முனியசாமி, சையது கான், உள்ளிட்டோருக்கு சீட் கிடைக்கும் என கருதப்பட்ட நிலையில் தர்மருக்கு அதிர்ஷ்டம் வீட்டிற்கே சென்று கதவை தட்டியுள்ளது. இன்று காலை தான் தர்மர் தனது சொந்த ஊரில் இருந்து சென்னை கிளம்பி செல்கிறார்.
மணி
மதுரை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil