/indian-express-tamil/media/media_files/2025/06/01/AGgou3qePGxG4RMqRsxa.jpg)
அ.தி.மு.க தரப்பில் இருந்து மாநிலங்களவை வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஜூன் 19-ஆம் தேதியன்று ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இருந்து ஏற்கனவே மாநிலங்களவை வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், தி.மு.க வேட்பாளர்களான பி. வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் ஆகிய அனைவரும் மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அ.தி.மு.க சார்பில் களமிறங்க இருக்கும் வேட்பாளர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை அக்கட்சி வெளியிட்டுள்ளது. அதில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின் படி, 19.6.2025 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களைவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான ஐ.எஸ். இன்பதுரை மற்றும் ம. தனபால் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர, தே.மு.தி.க-விற்கான இடஒதுக்கீடு தொடர்பான முக்கிய அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் தொடரும்.
2026-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலின் போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்திற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.