மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி அ.தி.மு.க மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் நிகழ்விடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 3) மதுரை ஜான்சிராணி பூங்கா அருகே ரிக்ஷா பேரணியை முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ செல்லூர் கே. ராஜூ தொடங்கி வைத்தார்.
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெற உள்ள மாநாடு, இதற்கு முன்பு நடந்த மாநாடுகளை விடவும், இதற்கு பின் நடக்கவுள்ள மாநாடுகளை விடவும் யாரும் நடத்த முடியாத அளவிற்கு அமையும். ஒரு எம்.ஜி.ஆரின் படத்தை மிஞ்ச வேண்டும் என்றால் மற்றொரு எம்.ஜி.ஆர் படம் தான் வேண்டும். அதுதான் இதன் வெற்றியை முறியடிக்கும். அது போல் அ.தி.மு.க மாநாட்டைஅ.தி.மு.க தான் முறியடிக்கும்.
கோடநாடு வழக்கை தீவிரமாக விசாரித்தார் எடப்பாடி பழனிசாமி. அந்த வழக்கில் ஈடுபட்டது தி.மு.கவினர் தான் என்பது அப்போதே தெரியவந்தது. துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த போதே கோடநாடு வழக்கு விசாரணை குறித்து அவருக்கு நன்றாக தெரிந்திருந்தும், இப்போது போராட்டம் நடத்துகிறார் என்றால் அவரது நோக்கம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், அண்ணாமலை பா.ஜ.க மாநிலத் தலைவர். எங்களுக்கு "Just like" அவ்வளவு தான். எங்களுக்கு மோடி ஜி, அமித்ஷா ஜி, நட்டா ஜி தான் முக்கியம். கூட்டணி கட்சியினர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அழைத்து பக்கத்தில் அமர வைத்தார் மோடி. மோடிக்கு தெரிந்த எடப்பாடி பழனிச்சாமியின் அருமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை?" என்று பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“