Advertisment

செங்கோட்டையன், தங்கமணி, ஆர்.பி உதயகுமார் மாறிமாறி ஆலோசனை: அ.தி.மு.க லேட்டஸ்ட் நிகழ்வுகள்

ஒற்றை தலைமை விவகாரம்; ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஐ மாறி மாறி சந்தித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்; முக்கிய நிர்வாகிகளும் சந்தித்து பேச்சு; இந்த நிகழ்வுகளின் முழுத் தொகுப்பு இங்கே

author-image
WebDesk
New Update
AIADMK single leadership issue

AIADMK single leadership issue O Panneerselvam met with Panruti Ramachandran

ADMK single head issue today incidents highlights: அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. அதிமுக தொண்டர் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக மாவட்ட செயலாளர்களும், கட்சி நிர்வாகிகளும் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்ததாக ஜெயக்குமார் கூறியதை அடுத்து தான் இந்த விவகாரம் பெரிய விவாவதமாக மாறியுள்ளது.

Advertisment

இதற்கிடையில் அ.தி.மு.க பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை வரைவதற்காக, அ.தி.மு.க தீர்மான குழு இன்றுடன் மூன்றாவது முறையாக கூடியது. இதில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துக் கொண்டுள்ள நிலையில், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துக் கொள்ளவில்லை.

முன்னதாக ஒற்றைத்தலைமை விவகாரம் காரணமாக, சென்னை கிரீன்வேஸ் சாலையில், ஓ.பி.எஸ் இல்லம் முன்பு அ.தி.மு.க தொண்டர்கள் அதிகளவில் திரண்டனர். அதேநேரம் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, முக்கூர் சுப்பிரமணியம் இ.பி.எஸ் இல்லத்துக்கு வருகை தந்தனர்.

இதையும் படியுங்கள்: முன் அறிவிப்பு இன்றி மூடப்பட்ட ரயில்வே கேட்: திருச்சியில் பிரசவ வலியில் துடித்த பெண்

பின்னர் அ.தி.மு.க அலுவலகத்தில் தீர்மான குழு கூட்டம் தொடங்கியது. அதேநேரம், ஒரு பக்கம் தீர்மான குழு ஆலோசனை நடைபெற்ற நிலையில், மற்றொரு பக்கம் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஓ.பி.எஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதற்கிடையில், அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் மீது தாக்குதல் நடந்தது. ஜெயக்குமாருடன் வந்த பெரம்பூர் நிர்வாகி மாரிமுத்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மாரிமுத்து ரத்தக் கறையுடன் வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், பெரம்பூர் மாரிமுத்து அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்கு சென்றார். காலை முதலே எடப்பாடி பழனிச்சாமி இல்லம் முன் அவரது ஆதரவு மாவட்ட செயலாளர்கள், ஆதரவாளர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

இந்தப்பக்கம் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் வாகனத்தை சுற்றி ஜெயக்குமார் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி முழக்கமிட்டனர்.

அதேநேரம், “இந்த படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?” – அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக தொண்டர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால் அந்தப் பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

இதனையடுத்து, அ.தி.மு.க அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு கோரி காவல் துறைக்கு அதிமுக சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க அலுவலகத்தில் இருந்து வெளியே வரவிடாமல் ஜெயக்குமாரை முற்றுகையிட்டு தொண்டர்கள் கோஷமிட்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், ”ஒற்றைத் தலைமை விவகாரத்தில் நான் ஒன்றும் சிதம்பர ரகசியத்தை உடைக்கவில்லை. அ.தி.மு.க ஒற்றைத் தலைமை கோரிக்கை உள்ளங்கை நெல்லிக்கனி போன்றது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தொண்டர்களின் உணர்வைத்தான் பிரதிபலித்தேன். அ.தி.மு.க பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து இன்று 3ஆம் கட்டமாக ஆலோசனை செய்தோம்.” என்று தெரிவித்தார்.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு இ.பி.எஸ் ஏன் வரவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 12 பேர் கொண்ட குழுதான் இதை முடிவு செய்கிறது. அண்ணன் ஓ.பி.எஸ் வந்தார் அது அவரது விருபபம், ஆனால் இ.பி.எஸ் ஏன் வரவில்லை என்று கேட்க கூடாது என்று பதில் அளித்தார்.

மேலும், ஒற்றையா ரெட்டையா என்பதை கட்சி முடிவு செய்யும் அதற்காக ஒருங்கிணைப்பாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் இருக்கிறார்கள். ஜெயக்குமார் இதில் முடிவு எடுக்க முடியாது என்றும் கூறினார்.

இதற்கிடையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 60க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் ஆதரவு என தகவல் வெளியானது. நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் இ.பி.எஸ் ஒற்றை தலைமை ஏற்க ஆதரவு தெரிவித்ததாக தகவல்கள் வெளிவந்தன. மேலும் தலைமை கழக நிர்வாகிகளில் பெரும்பாலானோர் இ.பி.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் தீர்மான குழு கூட்டம் நிறைவடைந்த நிலையில் சென்னை, கிரீன்வேஸ் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி உடன் ஜெயக்குமார், சிவி சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சந்திப்பு நடத்தினர்.

அதன்பிறகு, எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசினார். எடப்பாடி பழனிசாமி உடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் சந்தித்து பேசினார். இ.பி.எஸ்-ஐ சந்தித்த பின் ஓ.பி.எஸ் உடன் அவர் ஆலோசனை செய்தார். செங்கோட்டையனும் ஓ.பி.எஸ் உடன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

அடுத்ததாக, அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.

இதற்கிடையில், பொதுக்குழுவில் தாக்கல் செய்யப்பட உள்ள தீர்மானம் இறுதி செய்யப்படவில்லை என்றும், 'பொதுச் செயலாளர்' என்ற கோஷத்தை விளம்பரத்திற்காக எழுப்புகின்றனர் என்றும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Admk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment