விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு மாநாடு வரும் அக்டோபர் 2ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அ.தி.மு.க, விஜய்யின் த.வெ.க உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்கலாம் என கட்சித் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.
மக்கள் பிரச்சினைக்காக சாதிய, மதவாத சக்திகள் தவிர பிற எந்த சக்திகளோடும் இணைவோம். தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட அரசு முன் வர வேண்டும் என திருமாவளவன் கூறினார். வி.சி.க தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்து வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எதிர்க்கட்சியான அ.தி.மு.கவிற்கு அழைப்பு விடுத்தது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்நிலையில், வி.சி.கவின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு நேரில் வந்து அழைத்தால் தான் அ.தி.மு.க பங்கேற்பது பற்றி பரிசீலிக்கும் என அ.தி.மு.க மூத்த தலைவர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அவர் இன்று கூறுகையில், வி.சி.க மது ஒழிப்பு மாநாட்டிற்கு நேரில் அழைத்தால் பங்கேற்பது பற்றி அதிமுக பரிசீலிக்கும். அதிமுக உடன் கூட்டணி வைத்துக் கொண்டாலும் ஆட்சியில் பங்கு தரப்படாது எனவும் அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“