ADMK MLA Meeting June 14 News in Tamil : அதிமுக வில் அதிகார மோதல்கள் மூடு பனி போல் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் வேளையில், தமிழக சட்டப்பேரவை கூடுவதற்கான தேதியை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். வருகின்ற 21-ம் தேதி அன்று ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற உள்ள நிலையில், அதிமுக வில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் கொறடா ஆகிய பதவிகளுக்கு நிர்வாகிகள் இன்னும் நியமிக்கப்படாத சூழல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வத்துக்கு இடையே நடைபெற்று வரும் அதிகாரப் போரின் காரணமாக இதுநாள் வரையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படாமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கான தேதியை அறிவித்தார்.
எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், கொரோனா சூழலை கருத்தில் கொண்டு அதிமுக எம்.எல்.ஏக்கள் தவிர வேறு எந்த நிர்வாகிகளும் கலந்துக் கொள்ள கூடாதென ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை மூலம் அதிமுக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உத்தரவிட்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவராக வேண்டுமென்று பல கட்ட முயற்சிகளை பன்னீர்செல்வம் செய்த போதிலும், எம்.எல்.ஏக்களின் ஆதரவால் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக பன்னீர்செல்வத்தை பொறுப்பேற்றுக் கொள்ள எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி வந்தார். அதில் ஆர்வம் காட்டமால் பன்னீர்செல்வம் இருந்து வந்ததாக அதிமுக வட்டாரங்களில் பேசப்பட்டது. இந்த நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக எவ்வித முடிவினையும் எடுக்க இயலவில்லை என்பதே பன்னிர்செல்வத்தின் மனக் குமுறலாக இருக்கின்றது. இந்த சூழலில், அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று கூடியது.
எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டாலும், அதில் முனைப்பு காட்டாத பன்னீர்செல்வத்தின் நகர்வுகள் எப்படி இருக்கும் என்பது அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை பன்னீர்செல்வம் நிராகரிக்கும் வேளையில், அந்த பதவியில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் என இருவருக்குமிடையே பலமாக திகழும் கே.பி.முனுசாமி தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக மனோஜ் பாண்டியனை முன்னிறுத்தவும் பன்னீர்செல்வம் திட்டம் வைத்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இருப்பினும், என்ன நடந்தாலும் தனது முடிவே இறுதியானதாக இருக்க வேண்டும் என எடப்பாடி வியூகம் வகுத்துள்ளாராம்.
இதற்கு அடுத்ததாக கொறடா பதவிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. தனது ஆதரவாளரான நத்தம் விஸ்வநாதனை கொறடாவாக முன்னிருத்த பன்னீர்செல்வம் விரும்புவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால், எம்.எல்.ஏக்களால் கொறடா பதவிக்கான நிர்வாகி தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் அதிமுக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தென் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரே கொறடாவாக தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் ஈபிஎஸ் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் சூழல் நிமிடத்திற்கு நிமிடம் மாறுபடலாம். இன்று நடைபெறும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பன்னீர்செல்வம் எடுக்கும் முடிவைப் பொறுத்தே அதிமுக வின் அடுத்த மூவ் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், சுமார் 3 மணி நேரம் நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், சட்டமன்றத்தில் அதிமுக செயல்படும் விதம் தொடர்பான முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிமுக கொறடாவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/EkhOSoHQJb
— AIADMK (@AIADMKOfficial) June 14, 2021
இவர்களை தொடர்ந்து, துணை கொறடாவாக அரக்கோணம் எம்.எல்.ஏ ரவியும், பொருளாளராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவும், செயலாளராக கே.பி.அன்பழகனும், துணைச் செயலாளராக ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின் படி, அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி உள்ளிட்ட 15 நிர்வாகிகள் சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டார்கள் என்ற காரணத்தால் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.