ADMK treasurer issue OPS – EPS writes letter to Banks: அ.தி.மு.க.,வின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அது தொடர்பாக இ.பி.எஸ் வங்கிகளுக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், அ.தி.மு.க.,வின் பொருளாளராக நான் தான் இருந்து வருகிறேன் என வங்கிகளுக்கு ஓ.பி.எஸ்-ம் கடிதம் எழுதியுள்ளார்.
அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை இந்த விவகாரம் முடிவை எட்டியது. அ.தி.மு.க.,வின் சிறப்பு பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஒற்றை தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இதையும் படியுங்கள்: அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிர்ப்பு – தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் மனு
இதில் ஓ.பி.எஸ் வகித்து வந்த பொருளாளர் பதவி பறிக்கப்பட்டு, திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்கப்பட்டது. இதனையடுத்து, அ.தி.மு.க.,வின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இ.பி.எஸ் வங்கிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அ.தி.மு.க.,வின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளதை இ.பி.எஸ் வங்கிகளுக்கு தெரிவித்துள்ளார்.
இதனால், அ.தி.மு.க.,வின் வரவு செலவு கணக்குகள் மற்றும் அவற்றை கையாள்வதற்கான அதிகாரம் ஓ.பி.எஸ் இடம் இருந்து திண்டுக்கல் சீனிவாசனுக்கு மாற்றப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், அ.தி.மு.க.,வின் பொருளாளராக நானே இருந்து வருகிறேன் என, அ.தி.மு.க கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு ஓ.பி.எஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில், தன்னை தவிர அ.தி.மு.க வரவு செலவு கணக்குகளை கையாள யாரையும் அனுமதிக்க கூடாது என வங்கிகளிடம் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
பொருளாளர் தொடர்பாக ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரும் அ.தி.மு.க கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது, பொருளாளர் யார் என்ற கேள்வியை எழுப்பியதோடு, அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil