மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை கடுமையாக எதிர்ப்போம் - அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

காவிரி விவகாரத்தில் மேலும் 3 மாதம் கால அவகாசம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்ததைக் கடுமையாக எதிர்ப்போம் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து சென்னை மற்றும் பிற மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு நிலவி வரும் சூழலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடுதலாக 3 மாத கால அவகாசம் அளிக்குமாறு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு கட்சி சார்பில் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

இது குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 6 வாரக் காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏற்க முடியாத ஒன்று. மேலும் மத்திய அரசு கூடுதல் 3 மாதம் அவகாசம் கோரி மனு தாக்கல் செய்ததைக் கடுமையாக எதிர்ப்போம்.” என்று அவர் கூறினார்.
மேலும் காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அதிமுக அழுத்தம் கொடுத்ததுபோல் வேறு எந்தக்கட்சியும் அழுத்தம் தரவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் மத்திய அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உச்சநீதிமன்றம் ஏற்க கூடாது என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து நேற்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் நடத்த உள்ள போராட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் நிறைவுக்குப் பின்னர், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது. அனைத்துக்கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் எதிர்பாராத விதமாக திமுக-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் ஸ்டாலின் உட்பட அனைவரும் போலீசாரால் கைது செய்து விடுவிக்கப்பட்டனர்.

ஸ்டாலினின் போராட்டம் குறித்து அமைச்சர் ஜெயகுமாரிடம் கேள்வி எழுப்பியபோது, “ஸ்டாலினின் போராட்ட நாடகத்தைத் தமிழக மக்கள் என்றும் நம்பமாட்டார்கள்.” என்றார்.

×Close
×Close