திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக போராட்டம் நடத்தியது. இதில் தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் கலந்துகொண்டார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும். மத்திய அரசும் கர்நாடகாவின் செயலை தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராகவும் அதிமுக போராட்டத்தில் ஈடுபடும்" என கூறினார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும், 2019 மக்களவைத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தது.
சில நாட்களுக்கு முன்புதான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினர். இந்நிலையில் அதிமுக மூத்த தலைவரிடம் இருந்து இதுபோன்ற ஒரு கருத்து வந்துள்ளது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil