கறுப்புப் பண சட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டில் உள்ள சொத்துக்களை தெரிவிக்காதது தொடர்பாக, கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக வருமான வரித் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி மூன்று முறை வருமான வரித் துறையினர் சம்மன் அனுப்பியும், கார்த்தி சிதம்பரம் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவரை கைது செய்து விசாரணை அதிகாரி முன் ஆஜர்படுத்தும்படி, நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு வருமான வரித் துறை, வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற அனுமதியுடன் மனைவி மற்றும் குழந்தையுடன் லண்டன் செல்ல இருந்த கார்த்தி சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க கோரி, மூத்த வழக்கறிஞர்கள், நேற்று இரவு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் முறையிட்டனர். இந்த முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி, ஜாமீன், முன் ஜாமீன் மனுக்களை விசாரிக்கும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் மனுத் தாக்கல் செய்ய அனுமதியளித்தார்.
அதன்படி, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, தன் வீட்டில் இந்த மனுவை நேற்று இரவு 11 மணிக்கு மேல் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். அப்போது, வருமான வரித் துறை தரப்பு வழக்கறிஞர், வெளிநாட்டு பயணத்தை முடித்து திரும்பியதும் விசாரணைக்கு ஆஜராவதாக உத்தரவாதம் அளித்தால், வாரன்டை நிறுத்தி வைக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இதை ஏற்றுக் கொண்டு ஜூன் 28 ம் தேதி வருமான வரித் துறை அதிகாரி முன் விசாரணைக்கு ஆஜராவதாக கார்த்தி சிதம்பரம் தரப்பு அளித்த உத்தரவாதத்தை பதிவு செய்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான வாரன்டை நிறுத்தி வைக்கும்படி வருமானவரித் துறைக்கு அறிவுறுத்தினார்.