காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் காவலர்களை தாக்கியதாக பதிவு செய்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 4 பேருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு அருகே பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சியினர் சார்பில் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த போரட்டத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை தாக்கியதாக நாம் தமிழர் கட்சியைத் தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமான் உள்ளிட்டோர் பலர் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தான் போராட்டத்தில் மட்டுமே கலந்து கொண்டதாகவும், தனக்கு எதிராக காவல்துறையினர் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், இந்த வழக்கில் ஏற்கனவே பலர் முன்ஜாமின் பெற்றுள்ளதாகவும் எனவே எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் நீதிமன்றம் விதிக்கின்ற நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளதாகவும் மனுவில் தெரிவித்து இருந்தார்
இந்த வழக்கு இன்று மீண்டும் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கில் நிபந்தனை அடிப்படையில் சீமான் உள்ளிட்ட 4 பேருக்கு முன் ஜாமீன் வழங்குவதாகவும், அடுத்த இரண்டு வாரத்திற்கு இவர்கள் மதுரையில் தங்கியிருக்க வேண்டும். தினமும் காலை 10.30 மணிக்கு தல்லாகுளம் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து இடவேண்டும். விசாரணைக்கு தேவைப்படும் போது விசாரணை அதிகாரி முன்பு நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனைகள் விதித்த நீதிபதி முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.