சென்னை, தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக்கில் செமிகண்டக்டர் பயிற்சி பள்ளி அமைப்பதற்கு சென்னை ஐஐடியுடன் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழ்நாடு செமிகண்டக்டர் மிஷன்-2030 அறிவிக்கப்பட்டு அதனடிப்படையில் 2025-26 ம் நிதிநிலை அறிக்கையில் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை ஐஐடியில் நேற்று (ஆகஸ்ட் 1) நடைபெற்றது. சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி மற்றும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா முன்னிலையில் நடைபெற்றது.
தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இத்திட்டம் குறித்துப் பேசுகையில், "எங்கள் முக்கிய நோக்கம், செமிகண்டக்டர் துறையில் மனித வளத்தை மேம்படுத்துவதும், தமிழகத்தை உலக அளவில் போட்டித்தன்மை கொண்ட செமிகண்டக்டர் பணியாளர்களை உருவாக்கும் மையமாக மாற்றுவதும்தான். ஃபேப்லெஸ் வடிவமைப்பு முதல் உபகரண உற்பத்தி வரை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) முதல் ஸ்டார்ட்அப்கள் வரை, தொழில்நுட்பப் பயிற்சி முதல் மேம்பட்ட பொறியியல் வரை, அனைத்து நிலைத் திறமையாளர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம். வளர்ந்து வரும் செமிகண்டக்டர் துறைக்குத் தேவையான உயர் திறன் கொண்ட பணியாளர்களை இந்தியா முழுவதும் மற்றும் உலக அளவிலும் வழங்குவதற்கான ஒற்றை, தவிர்க்க முடியாத ஆதாரமாகத் தமிழகத்தை மாற்றுவதே எங்கள் இலக்கு" என்று கூறினார். இந்த திட்டத்திற்காக தமிழக அரசு ஆரம்ப மானியமாக ரூ.100கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தொழில்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தும்.
சிப் உருவாக்குவதிலும் அதை பேக்கிங் செய்வதிலும் நிறைய அறிவும், பயிற்சியும் உள்ளவர்கள் தேவைப்படுகின்றனர். மேலும் சிப் உற்பத்தி, பேக்கிங் திறன் உலக அளவில் நிறைய தேவைப்படுகின்றது. தமிழ்நாட்டில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மெட்லாஜி இன்ஜினியரிங் படித்த மாணவர்களுக்கு 20 நாள் முதல் ஒன்றரை மாதம் வரை பயிற்சி அளிக்க உள்ளோம். அந்த பயிற்சியின்போது சிப் உற்பத்தி செய்வது எப்படி? அதை பேக்கிங் செய்து பரிசோதனை செய்வது எப்படி? என பல கோணங்களில் பயிற்சி அளிக்க உள்ளோம். பயிற்சி முடிந்த பின்னர் உலக அளவில் அவர்களுக்கு பெரிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். இந்த பயிற்சி மையம் 5 மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும். முதற்கட்டமாக 2000 மாணவர்களுக்கும், அடுத்த கட்டத்தில் 2,500 என 4,500 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். சென்னையில் பயிற்சி அளிப்பது போல் பிற மாவட்டங்களிலும் பயிற்சி அளிக்க உள்ளோம் என்றார்.
இந்த புதிய மையம் சென்னையில் உள்ள மத்திய பல்தொழில்நுட்ப வளாகத்தில் அமையவுள்ளது. தமிழக அரசு செமிகண்டக்டர் துறையின் வளர்ச்சியை பல்வேறு நிலைகளில் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழில்நுட்ப வல்லுநர்கள் முதல் மேலாளர்கள் வரை அனைத்து நிலைகளிலும் பணியாளர் திறனை வளர்த்தல். தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தியை உள்நாட்டிலேயே மேம்படுத்துதல். புதிய கண்டுபிடிப்புகளை புரோட்டோடைப் செய்து, வணிகமயமாக்குதல். வலுவான தொழில்துறை ஒத்துழைப்புடன் பன்முக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவித்தல். வைரம் அடிப்படையிலான மேம்பட்ட சக்தி எலக்ட்ரானிக் சாதனங்களை மேம்படுத்துதல். செமிகண்டக்டர் சார்ந்த ஸ்டார்ட்அப்களுக்கு ஆதரவு அளித்தல் ஆகியன. இந்த 'செமிகண்டக்டர் பள்ளி' திட்டம் தமிழகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்து, இந்தியாவை செமிகண்டக்டர் துறையில் உலக அளவில் முன்னிறுத்தும் மைல்கல்லாக அமையும்.