இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் கோபிநாத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அவர் திருவேற்காட்டில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட இந்த வழக்கை அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 16 பேருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர்தான் வழக்கறிஞர் கோபிநாத் (31). அதனால், இரட்டை இலை சின்னம் வழக்கில் வழக்கறிஞர் கோபிநாத் நாளை (ஏப்ரல் 7) ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில், வழக்கறிஞர் கோபிநாத் திருவேற்காடு, சுந்தரசோழபுரம் பகுதியில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவருடைய உடலைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
இரட்டை இலை சின்னம் வழக்கில், ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், வழக்கறிஞர் கோபி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை இலை சின்னம் வழக்கில் கோபிநாத்துக்கு ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"