தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் நள்ளிரவு கைது செய்தனர். நேற்று காலை முதலே அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜியின் கரூர் மற்றும் சென்னை வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். கிட்டதிட்ட 18 மணி நேரங்களுக்கு மேலாக சோதனை செய்தனர். சோதனை முடிவில் அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.
செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்து விசாரணைக்கு கொண்டு செல்லும் வழியில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக அதிகாரிகள் சென்னை ஓமந்தூர் மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதித்தனர். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் செந்தில் பாலாஜியை மருத்துவமனை சென்று பார்த்தனர். மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் உடன் இருந்து கண்காணித்து வருகிறார்.
காலை 9 மணிக்குப் பிறகு தான் அமைச்சரின் உடல் நலம் குறித்து தெரிவிக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து செந்தில் பாலாஜியின் மனைவி, உறவினர்கள் கரூரிலிருந்து சென்னை வருகை தருகின்றனர். கைது நடவடிக்கையை எதிர்கொள்வது குறித்து முதல்வர் ஸ்டாலின் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி கூறுகையில், "எந்த துறை கைது செய்தாலும் ஜாமீன் கோர முடியும். உடனடி ஜாமீன் கோர முடியும். சட்டப்படி 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். செந்தில் பாலாஜியை மாஜிஸ்திரேட், மாவட்ட நீதிபதி முன் ஆஜர்படுத்தலாம். அந்த நேரத்தில் ஜாமீன் கோரலாம்.
இ.டி, சி.பி.ஐ, சி.பி.சி.ஐ.டி என துறைக்கு ஏற்ப ஜாமீன் சட்டம் இல்லை. எந்த துறை கைது செய்தாலும் ஜாமீன் கோர முடியும். அதே சமயம் எதிர் தரப்பினரும் காவலில் எடுத்து விசாரணை செய்ய உரிமை கோரலாம். உடல் நிலை, வழக்கின் தன்மையை அறிந்து ஜாமீன் வழங்க முடியும்" என்று கூறினார்.
அமலாக்கத் துறை சென்னையில் வைத்து செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தலாம் எனத் தகவல் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“