/tamil-ie/media/media_files/uploads/2020/08/advocate-semmani.jpg)
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் காவல் நிலையத்தில் 2017-ம் ஆண்டு வழக்கறிஞர் ஒருவரை சித்திரவதை செய்ததாக டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்பட 9 போலீசார் மீது சிபிசிஐடி போலீசார் எஸ்.சி.,எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் காவல் நிலையத்தில் 2017-ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி வழக்கறிஞர் ஒருவரை சித்திரவதை செய்ததாக சிபிசிஐடி போலீசார், ஒரு டி.எஸ்.பி. ஒரு இன்ஸ்பெக்டர் உள்பட 9 போலீசார் மீது சிபிசிஐடி போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை எஸ்.சி.,எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், ராதாபுரம் எஸ்.ஐ பழனி, பலவூர் எஸ்.ஐ விமல்குமார், எஸ்.ஐ முஹமது சமீர், காவலர்கள் செல்லதுரை, சாகர், ஜோஸ், பனங்குடி இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ், வள்ளியூர் டி.எஸ்.பி குமார் உள்பட 9 போலீசார் மீது வழக்குபதி செய்துள்ளனர். இவர்கள் மீது, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 448, 294 (பி), 354, 342, 355, 323, 324 மற்றும் 506 (ii) r/w 109 ஆகிய பிரிவுகளிலும் 3 (2) (VA) மற்றும் 3 (2) ஏழாம் பிரிவுகளிலும் எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் மார்ச் 2-ம் தேதி அளித்த உத்தரவின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
ஒரு டி.எஸ்.பி. ஒரு இன்ஸ்பெக்டர், 3 எஸ்.ஐ. காவலர்கள் உள்பட 9 பேர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்த சம்பவத்திற்கு கடந்த 2017-ம் ஆண்டு ராதாபுரம் காவல் நிலையத்தில் போலீசார் நடத்திய ஒரு சித்திரவதை காரணமாக அமைந்துள்ளது.
நவம்பர் 3, 2017ம் ஆண்டு வழக்கறிஞர் செம்மணி என்கிற ராசரத்தினம் என்பவர், பலவூர் காவல் நிலையத்தில் ஆகஸ்ட் 15, 2017-ம் ஆண்டு இசாக் செல்வகுமார் என்பவருக்கு எதிராக தான் அளித்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நாங்குநேரி நீதித்துறை நடுவர் முன்பு மனு செய்துள்ளார். அதில், அவர் இந்த வழக்குக்கு டி.எஸ்.பி மற்றும் இன்ஸ்பெக்டர் பொறுப்புடையவர்கள் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் பலவூரில் உள்ள மனுதாரரின் வீட்டுக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு சென்று அடித்து தாக்கியுள்ளனர். போலீசார்கள் அவரையும் அவரது குடும்பத்தினரையும் சாதியைச் சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். அதோடு, அவர்கள் அவரை ராதாபுரம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று கொடூரமாக தாக்கியுள்ளனர்.
காவல் நிலையத்தில், காவல்துறையினர் ரசரத்தினத்தின் ஆடைகளை கழற்றி, அவரது வாயில் செருப்பை திணித்துள்ளனர். பின்னர், அவர் வள்ளியூர் மாஜிஸ்திரேட் உத்தரவின் அடிப்படையில் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வழக்கறிஞர் செம்மணி முக்கியமான செயல்பாட்டாளராக அறியப்படுகிறார். இவர்தான் வள்ளியூர் நீதிமன்றத்தில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்காரர்களின் அனைத்து வழக்குகளிலும் வாதாடியவர்.
அண்மையில், சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் காவல் நிலையத்தில் போலீசார் சித்திரவதை செய்ததில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு 10 போலீசார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில், வழக்கறிஞர் ஒருவரை காவல்நிலையத்தில் சித்திரவதை செய்ததாக டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், 3 எஸ்.ஐ உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.