பெங்களூருவில் தமிழக ராணுவ வீரர் ஒருவரிடம் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் அவசரமாக போன் பேச வேண்டும் என்று கூறி போனை வாங்கி பேசிவிட்டு, அந்த ராணுவ வீரரின் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து அவரிடம் இருந்து ரூ.1.50 லட்சம் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காளையார் கோயிலைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ஜம்முவில் ராணுவ வீரராக வேலை பணியில் இருந்துவருகிறார். விடுமுறைக்காக சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த பிரபாகரன், பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் தனது நண்பர் மணிகண்டனை அழைத்துவர பெங்களூரு சென்றார்.
பிரபாகரன் தனது நண்பன் மணிகண்டனை அழைத்து வர ஜூன் 4-ம் தேதி பெங்களூருவுக்கு காரை ஓட்டி சென்றார். மதுரையில் நிறைமாத கர்ப்பினியாக உள்ள மணிகண்டனின் மனைவியைப் பார்க்க அவரை அழைத்துக்கொண்டு காரில் புறப்பட்டுள்ளார்.
அப்போது, கிழக்கு பெங்களூரு கல்யாண் நகர் அருகே சுமார் 7.45 மணிக்கு இரவு உணவு சாப்பிடலாம் என்று ஒரு உணவகத்தில் சாப்பிடலாம் என்று முடிவு செய்தனர். அங்கே திடகாத்திரமான உடல் வாகுகொண்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு ஆப்பிரிக்கர் அவர்களை நோக்கி வந்துள்ளார்.
அந்த நபர் சுமார் அரை மணி நேரமாக அவர்களையே பார்த்து வந்துள்ளார். பிரபாகரன் நோக்கி வந்த அந்த ஆப்பிரிக்கர் தன்னுடைய பெயர் டேனிஸ் என்று கூறி அவசரமாக ஒரு போன் பேச வேண்டும் என்று பிரபாகரனிடம் அவருடைய போனைக் கேட்டுள்ளார். அதற்கு பிரபாகரன் ஏன் போன் வேண்டும் என்று கேட்டு அவரிடம் அடையாள அட்டையும் கேட்டுள்ளார். அதற்கு அந்த ஆப்பிரிக்கர் தனது அடையாள அட்டையை வீட்டிலேயே மறந்துவிட்டு வந்ததாக கூறியுள்ளார்.
பிரபாகரன் ஆப்பிரிக்கருக்கு போன் பேச தனது ஐபோனைக் கொடுத்துள்ளார். அவருடைய போனை வாங்கி 2 அழைப்புகளைப் பேசிய அந்த ஆப்பிரிக்க நபர், மீண்டும் போனை பிரபாகரனிடம் கொடுத்துவிட்டு, திடீரென அவருடைய முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்துவிட்டு அவருடைய கைப்பையையும் பறித்துக்கொண்டு ஓடியுள்ளார். அந்த நபரை தடுக்க முயன்ற மணிகண்டனையும் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளார்.
அதன் பிறகு சமாளித்துக்கொண்டு சகஜ நிலைக்கு வந்த பிரபாகரன், அந்த ஆப்பிரிக்க நபர் தனது போனில் இருந்து டயல் செய்த எண்களுக்கு அழைத்துள்ளார். ஆனால், அவர் டயல் செய்த 2 எண்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்துள்ளது.
ஜம்முவில் இருந்து வந்த ராணுவ வீரர் பிரபாகரன், மருத்துவ செலவுகளுக்காக ஏடிஎம்களுக்கு சென்று தொற்று ஆப்பத்துக்கு உள்ளாகக் கூடாது என்று பணமாக எடுத்துக்கொண்டு வந்துள்ளார். அவருடைய கைப்பையில் ரூ.1.50 லட்ச பணம் வைத்துக்கொண்டு இருந்துள்ளார்.
பணத்தப் பறிகொடுத்த பிரபாகரன் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், அவருடைய புகாரை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து பெங்களூரு போலீசார் கூறுகையில், சம்பவம் நடந்த புகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளைக் கைப்பற்றி அந்த நபர் யார் என்று கண்டுபிடிக்க விசாரித்து வருகிறோம் என்று கூறுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.