/tamil-ie/media/media_files/uploads/2022/08/Kannan.jpg)
கனல் கண்ணன் பேச்சுக்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு
திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள பெரியார் சிலை குறித்து திரைப்பட நடிகரும் ஸ்டண்ட் மாஸ்டருமன கனல் கண்ணனின் சென்னை மதுரவாயலில் நடந்த இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயண நிறைவு விழா பொதுக்கூட்டத்தில், ஸ்ரீரங்கத்தில் "ஸ்ரீரெங்கநாதனைக் கும்பிட ஒரு லட்சம் பேருக்கும் மேற்பட்டோர் சென்று வருகிறார்கள்.
அங்கே எதிரே இருக்கின்ற ஒரு சிலை, கடவுளே இல்லை என்று சொன்னவருடைய சிலை. அது என்று உடைக்கப்படுகிறதோ, அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்," என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவருடைய இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையானது.
இதனையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். கனல் கண்ணனின் பேச்சால் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அனைவரது கவனமும் ஸ்ரீரங்கம் பெரியார் சிலை பக்கம் திரும்பியிருக்கின்றது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் ராஜகோபுரத்திலிருந்து அம்மா மண்டபம் செல்லும் சாலையில் காவல் நிலையம் எதிரே திராவிடர் கழகத்தினரால் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேர தொடர் கண்காணிப்பிலும் போலீஸ் பாதுகாப்பிலும் இந்த சிலை உள்ளது.
அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றி, வழங்கப்பட்ட இடத்தில் பெரியார் சிலை அமைக்கப்பட்ட வரலாறு. திருச்சி மாநகராட்சியின் ஒரு கோட்டமாக உள்ள ஸ்ரீரங்கம் தனி நகராட்சியாக இருந்தது.
அப்போது (1970-ஆம் ஆண்டு) நகராட்சி தலைவராகச் சுதந்திரா கட்சியைச் சேர்ந்த Y. வெங்கடேச தீட்சிதர் இருந்தார். அவரது தலைமையில் நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்ய ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து கடந்த 1973-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டு, 1975-ம் ஆண்டு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திடம் அந்த இடம் ஒப்படைக்கப்பட்டது.
பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திடம் இடம் ஒப்படைக்கப்பட்டவுடன், அந்த இடத்தில் முதலில் நினைவு கல்வெட்டு வைக்கப்பட்டது. அதன் பின்னர் பெரியார் சிலை வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, 2006-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி பெரியார் சிலை திறப்பு விழா என்று அறிவிக்கப்பட்டது.
கைத்தடியைப் பிடித்தபடி நின்ற நிலையில் பெரியார் சிலை சிமெண்டால் அமைக்கப்பட்டது. திறப்பு விழா பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தபோது, யாரும் எதிர்பாராத வகையில், பீடத்தில் நிறுவப்பட்டிருந்த பெரியார் சிலையின் தலைப்பாகம் 2006 டிசம்பர் 7-ம் தேதி அதிகாலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது.
இதையடுத்து தொடர் போராட்டம், பதற்றம் ஏற்பட்டது. அந்த சம்பவத்தால், அறிவித்தபடி, டிசம்பர் 17-ம் தேதி சிலை திறக்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்தது. ஆனால், அடுத்த திருப்பமாக அன்று இரவே சிலை அமைப்புக் குழுவால் பெரியாரின் வெண்கலச் சிலை வைக்கப்பட்டது.
வேறு இடத்தில் வைக்கத் திட்டமிட்டிருந்த இந்த சிலைதான் ஸ்ரீரங்கத்தில் தற்போதுள்ள என்பது வரலாறு. அப்போது, சிலையை உடைத்த வழக்கில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை திருச்சி நீதிமன்றத்தில் இன்றும் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ``யூடியூப் சேனல் ஒன்றில் ஒருவர் சிவபெருமானை அவமானப்படுத்துகிறார், அசிங்கப்படுத்துகிறார். தில்லை நடராஜருடைய நடனத்தை கேலி, கிண்டல் செய்கிறார்.
இது தொடர்பாக பாஜக-வினர் 42 இடங்களில் புகார் கொடுத்துள்ளனர். ஓர் இடத்திலும் புகாரை வாங்கவில்லை. உச்சபட்சமாக அதிக சைவ மக்கள் இருக்கும் தமிழ்நாட்டில் சிவபெருமானை அவமதித்துவிட்டு பத்திரிகையாளர் என்ற போர்வையில் இருக்கிறார்கள். முதல்வரும் அவர்களைச் சந்தித்து போட்டோ எல்லாம் எடுத்து அனுப்பிவைக்கிறார். அதைக் கருத்துச் சுதந்திரமென்று சொல்கிறீர்கள்.
ஆனால் கனல் கண்ணன் ஒரு வார்த்தையைச் சொல்கிறார். உடனே 10 போலீஸார் அவரது வீட்டில். கருத்துச் சுதந்திரம் என்று சொல்லும்போது திமுக-வினர் மேடையில் பேசும் எத்தனையோ வீடியோக்களைக் காட்டுகிறேன். கனல் கண்ணன் பேசியது பெரிய தப்பு என்றால், இவர்கள் பேசியதெல்லாம் பெரிய பாவம்.
மாநில அரசின் செயல்பாடு இதில் சரியாக இருக்க வேண்டும். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெளியே அந்தச் சிலை இருக்க வேண்டுமா?’ என 1,000 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தினால் 1,000 பேரும் இருக்கக் கூடாது’ என்றுதான் சொல்வார்கள். பொது இடங்களில் இந்தச் சிலையை வைத்திருக்கலாம். மக்கள் கடவுளை நம்பி வரும் இடத்தில் அந்தச் சிலை தேவையா… இதைத்தான் கனல் கண்ணன் பேசிய பேச்சாகப் பார்க்கிறேன்” என்றார்.
அதேபோல், பாஜகவின் ஹெச்.ராஜா செய்தியாளர் சந்திப்பின்போது, பெரியார் சிலை குறித்து கருத்து தெரிவித்த திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை போலீஸார் தேடி வருகின்றனர். அவர் பேசியதில் என்ன தவறு உள்ளது? நடராஜரை இழிவுபடுத்தி யூடியூப் சேனலில் பேசியவரின் வீட்டிற்கு செல்ல போலீசாருக்கு பாதை தெரியவில்லையா? ஆண்டவனை இழிவா பேசலாம் முந்தாநாள் பிறந்து இறந்த மனிதனை இழிவாக பேசக்கூடாதா? இதில் என்ன தவறு இருக்கிறது.
இந்துக்கடவுள் நடராஜரை இழிவுபடுத்தி யூடியூப் சேனலில் பேசியவரை கைது செய்ய துப்பில்லாத, வக்கில்லாத, திராணி இல்லாத, துணிச்சல் இல்லாத காவல்துறை கனல் கண்ணன் வீட்டிற்கு போனது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆயிரம் கனல்கண்ணன் அதே கருத்தை சொன்னால் என்ன செய்வீர்கள்.
மயிலாடுதுறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஒரு பெண்ணை கடத்த முயன்றுள்ளனர். தடுக்க முயன்ற பெண்ணின் தாயாரையும், சகோதரர்களையும் தாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என ஹெச்.ராஜா பேசியிருப்பது சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்றது.
தமிழ்நாடு முழுவதும் பெரியார் பெரிதும் அறியப்பட்டாலும், திருச்சி மக்களுடன் பெரியார் நெருங்கிய தொடர்பிலிருந்ததால், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் எதிரே 16 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு பெரும்பான்மையான மக்கள் எதிர்ப்பு காட்டவில்லை, பெரியார் சிலை அங்கே இருப்பதால் எந்த தொந்தரவும் இல்லை எனச்சொல்லி ஆதரவு கொடுப்பதாகவே ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பெரியாரை வைத்து இப்போது மீண்டும் பாஜக உள்ளிட்ட இந்து மக்கள் கட்சியினை சார்ந்தவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி அமைதிப்பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் கலவரத்தை உருவாக்கவே திட்டமிட்டு இப்படி செய்வதாக திக பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.