சேலம்-சென்னை பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு: ஏன், எதற்கு, எப்படி?

ஐந்து மாவட்ட தலைநகரங்களிலும் பசுமை வழிச்சாலை அமைக்கும் அரசாணையை எரிக்கும் போராட்டம் நடத்தப்படும்

அருண் ஜனார்த்தனன்

சேலம்-சென்னை இடையேயான பயண நேரத்தை குறைக்கும் வகையில், பசுமை வழிச்சாலை அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ளது.தமிழ்நாட்டில் மிகப்பெரிய திட்டங்களுக்கு தொடர்ந்து ஏற்படும் எதிர்ப்பு இந்த பசுமை வழிச்சாலை திட்டத்திற்கும் எழுந்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் திட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை என தொடர்ந்து மக்களிடம் எதிர்ப்புகள் கிளம்ப என்ன காரணம்?

திட்டம்:

10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 274 கி.மீ.,க்கு, எட்டு வழிச்சாலை அமைகிறது.சென்னை- – சேலம் இடையில், 179 ஏ, 179 பி என புதிய தேசிய நெடுஞ்சாலை, அமைப்பதற்கான பணி, கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, சம்பந்தப்பட்ட கிராமங்களில் சர்வே எடுக்கப்பட்டு, அளவீடுகள் தயாரிக்கப்பட்டன. இது தற்போது, எட்டு வழிச்சாலை எனும், பசுமை விரைவு சாலையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், சென்னை, மண்ணிவாக்கம் சுற்றுச்சாலையில் துவங்கி, சேலம், அரியானுார் வரை, 274 கி.மீ., தொலைவிற்கு இச்சாலை அமைக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 59 கி.மீ., திருவண்ணாமலை மாவட்டத்தில், 122 கி.மீ., கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2 கி.மீ., தர்மபுரி மாவட்டத்தில், 53 கி.மீ., சேலம் மாவட்டத்தில், 38.3 கி.மீ., உள்ளடங்கியுள்ளது. இதில், 250 கி.மீ., துாரம் புதிதாக சாலை அமைக்க, 24 கி.மீ., துாரம் ஏற்கனவே உள்ள சாலையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 2,343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி வழங்கிய கடிதத்தில் சென்னை- சேலம் இடையில் ரூ. 10 கோடி செலவில் பசுமைவழிச் சாலை அமைக்கப்பட்டால் பயண நேரம் 8 மணி நேரமாக குறையும் என்று கூறியிருந்தார். மேலும், இந்தத் திட்டத்தின் கீழ், நகரங்களில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும், போக்குவரத்தை குறைக்கும் வகையிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். சில நாட்களுக்கு பின்னர் பசுமைவழிச் சாலை திட்டத்தை மத்திய அரசு ஒப்புக் கொண்டது.

அதே நேரத்தில் இந்த பசுமை வழிச்சாலைக்கு கிராம மக்கள் பெருமளவில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த எட்டு வழிச் சாலை காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் நெல் விளைச்சலை அதிகளவில் பாதிக்கும் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தில் எட்டு வழிச்சாலை அமைக்கப்பட்டால் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் என்று அகில இந்திய விவசாயச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.சண்முகம் கூறியுள்ளார்.

அதே போல் திருவண்ணாமலையில் ஒரு ஏக்கர் நிலம் ஏறக்குறைய ரூ. 8 லட்ச ரூபாயில் தொடங்கி 30 லட்சம் ரூபாய் வரையிலும் , காஞ்சிபுரத்தில் ஒரு கோடி ரூபாய் வரையிலும் விற்கப்பட்டு வருகிறது. அரசாங்கம் மக்களிடம் எந்த ஒரு கருத்தையும் கேட்காமல் இந்த பசுமை வழிச்சாலையை செயல்படுத்த பெரிதளவில் ஆர்வல் காட்டி வருவதாகவும் பி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

ஆனால் அரசு தரப்பில் பொதுமக்களிடம் ஆலோசனைகள் நடத்திய பின்பே இந்த திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டம் குறித்த முழு அறிக்கை மக்களிடன் அரசு அதிகாரிகள் கூறிய பின்பு சில விவசாயிகள் தாமாகவே முன்வந்து விளைநிலைங்களை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பு:

பசுமை வழிச்சாலை திட்டத்தால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் நிலங்களையும், வீடுகளையும் இழந்து, வீதிக்கு தள்ளப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எதிர்ப்பு எழுகிறது. எனவே, தங்களுடைய எதிர்ப்பை மத்திய- மாநில அரசுகளுக்கு தெரிவிக்கும் வகையில், பசுமைச் சாலையால் பாதிக்கப்படும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் வீடுகள், நிலங்களில் வரும் 26ம் தேதி கருப்பு கொடியேற்றப்படும். அதேபோல், அடுத்த மாதம் 6ம் தேதி ஐந்து மாவட்ட தலைநகரங்களிலும் பசுமை வழிச்சாலை அமைக்கும் அரசாணையை எரிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் பியுஷ் மானுஷ் கல்லூரி மாணவி வளர்மதி உள்ளிட்ட 24 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த போராட்டத்தில் பெண்கள் மற்றும் விவசாயிகளும் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தை மக்களின் ஒத்துழைப்பும் ஒப்புதலுமின்றி, சர்வாதிகார மனப்பான்மையுடன் நிறைவேற்றிட முடியாது என, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் கடந்த சனிக்கிழமை சேலத்தில் இதை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு தொடர்ந்து இதே பாதையில் திட்டத்தைப் பிடிவாதமாக நிறைவேற்றவும், மக்களைத் துன்புறுத்தி, அவர்களின் விளை நிலங்களை அத்துமீறிப் பறிக்க முயலுமேயானால், இந்தத் திட்டம் தொடர்புடைய அனைத்து மாவட்டங்களிலும் திமுக அறவழியில் மாபெரும் போராட்டத்தை நடத்தும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த எட்டு வழிச்சாலை அமைக்கும் டெண்டர் விவகாரத்தில் முதலமைச்சரின் குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close