Arun Janardhanan :
அரசியலில் இருந்து ஒதுங்குவதாக வி.கே. சசிகலாவின் அறிவிப்புக்கான காரணங்கள் புரியாத புதிராகவே உள்ளது. அதிமுகவியன் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலாவின் இந்த அறிவிப்பு, டிடிவி தினகரனையும், அவர் சார்ந்த கட்சியுமான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
2018ல் இரட்டை இலையையும், அதிமுகவையும் மீட்கும் மீட்பதற்காக இந்த கட்சியை தினகரன் தொடங்கினார். நவம்பர் 23, 2017 ஆம் ஆண்டு ஆா். கே. நகா் சட்டமன்ற உறுப்பினா் தினகரனிடம் இருந்து அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலைச் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் பறித்துக்கொண்டது. இதனால் கட்சி மற்றும் சின்னம் இல்லாமல் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டார் .
சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா தீவிர அரசியலில் களமிறங்க முடிவெடுத்திருந்தார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. கடந்த, புதன்கிழமை இரவு சசிகலாவின் அறிவிப்பு வெளியானதில் இருந்து, தினகரனின் அரசியல் செயல்பாடுகள் முடங்கியிருப்பதாக அம்மா மக்கள் கட்சியின் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
" பிற கட்சித் தலைவர்களுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவில்லை" என்று கட்சி பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். "வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட கட்சி சார்பாக போட்டியிட 1,300 க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால், இது அனைத்தும் சசிகலாவின் அறிவிப்புக்கு முந்தைய நாட்களில் பெறப்பட்டது. தினகரனிடம் எந்த திட்டமும் இல்லை என்பது போல் தோன்றுகிறது. கூட்டணி சேர அரசியல் கட்சிகள் இல்லாத நிலையில், தனியொருவனின் போரட்டமாக அமையும்" என்று தெரிவித்தார்.
கட்சி இணைப்பு போன்ற தனது அடுத்த முடிவை அறிவிப்பதற்கு முன்பு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பதிலுக்காக தினகரன் காத்திருப்பதாக அதிமுக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
“அதிமுக கூட்டணியில் தினகரனை இணைப்பதற்கான முயற்சிகளை தமிழகத்தின் ஆர்.எஸ்.எஸ் தலைமையும், மத்திய பா.ஜ.க அரசும் எடுத்துவருகிறது. முயற்சி பலனளித்தால், வரும் சட்டமன்றத் தேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுக கூட்டணியின் ஒரு பகுதியாக அமையும்,”என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, அதிமுக கூட்டணியில் தமிழக பாஜக 20 சட்டமன்றத் தொகுதியிலும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு (பி.எம்.கே) 23 தொகுதிகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளன. கேப்டன் விஜயகாந்தின் தேமுதிக கட்சி உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, சட்டப்பேரவைத்தேர்தலில் சார்பில் போட்டியிடும் ஆறு வேட்பாளர்களின் பெயர்களை கொண்ட முதல் பட்டியலை அஇஅதிமுக வெளியிட்டது .
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இந்த பட்டியலை வெளியிட்டனர்.
அதன்படி, ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் தொகுதியிலும், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
அமைச்சர் டி ஜெயகுமார் ராயபுரம் தொகுதியில் 7 ஆவது முறையாக போட்டியிடுகிறார். அமைச்சர் சி வி சண்முகம், விழுப்புரம் தொகுதியில் மீண்டும் களம் காண்கிறார்.
முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலும், சட்டமன்ற உறுப்பினர் எஸ் தேன்மொழி, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil