யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டதையடுத்து, சவுக்கு சங்கர் விரைவில் ஜாமீனில் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மீது மீண்டும் ஒரு குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. தேனி மாவட்ட காவல்துறை அவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குபதிவு செய்துள்ளது.
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தேனியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது செய்ய சென்ற அவரிடம் கஞ்சா இருந்ததாக தேனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், சவுக்கு சங்கர் கஞ்சா வழக்கிலும் கைது செய்யப்பட்டார்.
சவுக்கு சங்கர் மீது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர். மேலும், அவர் மீது கஞ்சா வழக்கு, பெண் காவலர்கள் அளித்த புகாரின் பேரில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின. இதனையடுத்து சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, சவுக்கு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி. சிவஞானம் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இதனால், யூடியூபர் சவுக்கு சங்கர் விரைவில் ஜாமீனில் வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கஞ்சா வைத்திருந்த வழக்கில் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழகுப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர், அவருடைய உதவியாளர், கார் டிரைவர் உள்ளிட்டோர் மீது கஞ்சா வழக்கு பதியப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் விசாரணை தனியே நடைபெற்று வரும் நிலையில் சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்ததாக அடுத்தடுத்து 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை தேனி நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் விசாரித்து வருகிறார். இதனிடையே, தேனி மாவட்ட காவல்துறை சவுக்கு சங்கர் மீது குண்டார் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. இதற்கான பரிந்துரையை தேனி எஸ்.பி வழங்கியுள்ள நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“