Advertisment

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை; காதலனை கொன்று ஆற்றில் வீசிய கொடூரம்; 8 பேர் கைது

காதல் விவகாரத்தில் மகளுக்கு எதிராக களமிறங்கிய தந்தை மகளின் காதலனை தோப்புக்கு அழைத்து அங்கேயே கூலிப்படை ஆட்கள் மூலம் தீர்த்துக்கட்டி உடலை கல்லணைக் கால்வாயில் வீசிச்சென்ற சம்பவம் தஞ்சை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

author-image
WebDesk
New Update
8 பேர் கைது

8 பேர் கைது

காதல் விவகாரத்தில் மகளுக்கு எதிராக களமிறங்கிய தந்தை மகளின் காதலனை தோப்புக்கு அழைத்து அங்கேயே கூலிப்படை ஆட்கள் மூலம் தீர்த்துக்கட்டி உடலை கல்லணைக் கால்வாயில் வீசிச்சென்ற சம்பவம் தஞ்சை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதுகுறித்த விபரம் வருமாறு;

Advertisment

தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரம் தெற்கு வீதியை சேர்ந்தவர் கர்ணன். இவரது இளைய மகன் சக்திவேல். தனியார் பால் கம்பெனியில் வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி அன்று வீட்டை விட்டு சென்ற சக்திவேல் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது அண்ணன் சரவணன் வல்லம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.  புகாரின் பேரில் வல்லம் போலீஸார் வழக்குப் பதிந்து சக்திவேலை தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 8-ம் தேதி அம்மாபேட்டை அருகே ராராமுத்திரக்கோட்டை பகுதியில் நெய்வாசல் வாய்க்காலில் வெட்டுக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் உடல் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்த உடலை மீட்ட அம்மாப்பேட்டை போலீஸார், வல்லம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து வல்லம் போலீஸார் சக்திவேலுவின் உறவினர்களை அழைத்துக் கொண்டு அங்கு சென்றனர். இதில் சில அடையாளங்களை பார்த்த அவரது உறவினர்கள் அது சக்திவேல் என்பது உறுதி செய்து, கதறி அழுதனர். பின்னர், சக்திவேலின் உடலை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த பரிசோதனையில் சக்திவேல் கடுமையாக தாக்கப்பட்டு, வெட்டி படுகொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து வல்லம் காவல் துணை கண்காணிப்பாளர் நித்யா மேற்பார்வையில், வல்லம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில், தனிப்படை அமைத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்தக்கொலை குறித்து அவரது காதலி உள்பட பலரையும் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், சக்திவேலுக்கும், அய்யாசாமிப்பட்டியை சேர்ந்த பாலகுரு என்பவரின் மகள் தேவிகா என்பவருக்கும் காதல் மலர்ந்திருக்கின்றது. நீண்ட நாட்களாக தனிமையில் சந்திப்பது, வெளியில் செல்வது என இருவரும் மகிழ்ந்திருக்கின்றனர். இருவரும் ஒரே சமுதாயமாக இருந்தாலும், இந்த காதலுக்கு தேவிகாவின் தந்தை பாலகுரு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், சக்திவேலுவை தன் மகளிடம் இருந்து பிரிப்பதற்கும், தீர்த்துக்கட்டுவதற்கும் திட்டமிட்ட பாலகுரு, செங்கிப்பட்டியைச் சேர்ந்த சத்யா என்பவரிடம் இது குறித்து கூறியுள்ளார். அதற்கு சத்யாவும் மதுரையில் உள்ள கூலிப்படையினரை வரவழைத்து கொலை செய்யலாம் எனக்கூறியுள்ளார்.

 இதற்கிடையில் சக்திவேல் அடிக்கடி பாலகுருவிடம் அவரது நிலம் விற்பனை சம்பந்தமாக வந்து பேசி செல்வது வழக்கம். இதை பயன்படுத்தி தனது நிலத்தை விற்பனை செய்வது குறித்து பேச வேண்டும் என்று சக்திவேலுவை கடந்த 6-ம் தேதி திருமலைசமுத்திரம் பகுதியில் உள்ள தனது தென்னந்தோப்புக்கு பாலகுரு அழைத்து வந்துள்ளார்.

 பின்னர், அங்கு மறைந்திருந்த மதுரையை சேர்ந்த கூலிப்படையினர் 3 பேர் சக்திவேலுவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்த கொலைக்கு பாலகுருவின் மகன் துரைமுருகன் மற்றும் பாலகுருவிடம் வேலை பார்க்கும் கதிர்வேல் ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

 பின்னர் சக்திவேலுவின் உடலை ஒரு வாகனத்தில் மறைத்து எடுத்துச் சென்று குருவாடிப்பட்டி பகுதியில் கல்லணைக் கால்வாய் ஆற்றில் வீசியுள்ளனர். மேலும் அவர் வந்த மோட்டார் சைக்கிளையும் ஆற்றில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் அவரவர் வீடு திரும்பி உள்ளனர்.

அதேநேரம், சக்திவேலை கொலை செய்ய தனது தந்தை திட்டம் தீட்டியது சக்திவேலின் காதலி தேவிகாவுக்கும் தெரிந்திருந்தாலும், அதை வெளியே சொல்ல அச்சப்பட்டு கொலை சம்பவத்தை மறைத்திருக்கின்றார்.

இதற்கிடையே போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், சக்திவேலுவின் அலைபேசி இணைப்பில் உள்ள அழைப்புகளை ஆய்வு செய்ததில் சக்திவேலுவிடம் நீண்ட நேரம் தேவிகாவின் தந்தை பாலகுரு, தேவிகா ஆகியோர்தான் இறுதியாக பேசியதை அறிந்த போலீஸார் தங்கள் பாணியில் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டதில் சக்திவேலுவை தான் தான் கூலிப்படையினரை வைத்து கொலை செய்ததாக ஒத்துக்கொண்டார்.

இதனையடுத்து கூலிப்படையினரை தேடி களமிறங்கிய போலீஸார் கொஞ்சம் திணறியதால், மீண்டும் பாலகுருவை வைத்து கூலிப்படையை பிடிக்க முயற்சித்தனர். அதன்படி, பேசிய தொகையை இப்போதே கொடுத்து விட்டு அடுத்த வேலைகளை பார்க்கவேண்டும், வாருங்கள் என கூலிப்படையை அழைக்க வைத்தது போலீஸ்.

இதுதெரியாமல், பாலகுருவின் அலைபேசியை நம்பி மதுரையைச் சேர்ந்த கூலிப்படையினர் பாலகுருவிடம் பணத்தை வாங்க வந்துள்ளனர். இத்தகவல் அறிந்த போலீஸார் அந்த பகுதியில் பதுங்கி இருந்தனர். அப்போது கூலிப்படையை சேர்ந்த கிரிவாசன், சந்தோஷ்குமார், கார்த்தி ஆகிய  மூவரும் பாலகுருவை பார்க்க வந்தபோது, அவர்களை மடக்கி பிடித்தனர்.

இதனைத் தொடந்து இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் வல்லம் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தேவிகாவை திருச்சி பெண்கள் சிறையிலும், மற்ற 7 பேரையும் புதுக்கோட்டை சிறையிலும் அடைத்தனர். மகளின் காதல் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை வஞ்சகத்தனமான போக்கில் காதலனை பேச அழைத்து ஆற்றில் கொன்று வீசிய சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரைப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment