ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் மற்றும் இடமாற்றத்திற்கு இடைக்கால தடைவித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அகில இந்திய சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் வழக்கறிஞர் ஜி.பாலாஜி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.
அதில் தமிழ்நாட்டில் உள்ள ஆகம கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம், பயிற்சி உள்ளிட்டவைக்கு சேஷம்மாள், ஆதி சைவ சிவாச்சாரியார்கள் வழக்குகளில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மீறி அரசு செயல்பட்டு வருகிறது.
இதனை கண்டித்து ஆகம கோயில்களில் கட்டாயமாக உச்சநீதிமன்ற தீர்ப்பின் படியே அர்ச்சகர்கள் நியமனம் செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த வழக்கை உச்சநீதிமன்றம் நீதிபதிகள் போபண்ணா மற்றும் எம்.எம்.சந்ரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் “தமிழ்நாடு அரசு தொடர்ந்து உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மீறி ஆகம கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம், இடமாற்றம் ஆகியவற்றை செய்து வருகிறது. இது சட்டவிரோதமானது” என்று வாதிட்டார்.
இதனையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆகம கோயில்களிலும் அர்ச்சகர் நியமனம், இடமாற்றம் உள்ளிட்டவற்றை அரசு மேற்கொள்ளாமல் தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும்.
இந்த மனுக்கள் தொடர்பாக 3 வாரங்களுக்குள் இந்து அறநிலையத் துறை மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“