மக்களை வாட்டியெடுக்க நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்!!!

மக்களைச் சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம் நாளை முதல் தொடங்குகிறது. இந்தத் தாக்கம் நாளை முதல் 28ம் தேதி வரை நீடிக்கிறது.

2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கத் தொடங்கியது. தமிழகத்தில் பல பகுதிகளில் கோடையின் வழக்கமான தொடக்கத்திற்கு முன்னமே வெயில் அளவு 100 டிகிரியை மிஞ்சியது. கடந்த இரண்டு வாரங்களாக அனலின் தாக்கம் இரவு பகல் என்று இல்லாமல் மக்களை வாட்டி வதைக்கிறது.

ஆரம்பமே அதிரடியாக இருக்கும் நிலையில் மேலு தெறிக்கவிடப்போகிறது கத்திரி வெயில். நாளை முதல் தொடங்கும் அக்னி நட்சத்திரத்தினால், வெப்ப சலனம் கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழத்தில் ஆங்காக்கே மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்க நேற்று வேலூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்தது.

மேலும், இது குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், அடுத்த 3 மாதத்திற்கு வெயிலின் அளவு வழக்கத்தை விட 1 டிகிரி கூடுதலாக இருக்கும், அக்னி காலத்தில் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் இருந்து அனல் காற்று அதிகம் வீசும், காற்றில் ஈரப்பதம் குறைந்து வறண்ட வானிலை காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வெப்பம் தற்போது இருக்கும் அளவை விட அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு தனது கோரதாண்டவத்தை புரியக் காத்திருக்கும் அக்னி நட்சத்திரத்தின்போது பொதுமக்கள் யாரும் அவசியம் இல்லாமல் வெயிலில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

×Close
×Close