நேற்று அகமதாபாத் நகரில் இருந்து லண்டன் நோக்கி 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 ரக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பெரும் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமான நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி விடுதி பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. இந்த கோரமான விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பேரில், 241 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தனை பெரிய உயிர் இழப்பு இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயமாகப் பதிவாகியுள்ளது.
இந்த துயரமான சூழ்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலும், அவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காகவும், கோயம்புத்தூர் மணியக்காரன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள கேம்போர்ட் பள்ளி மாணவர்கள் முன்வந்தனர். பள்ளிக் குழந்தைகள், ஆசிரியர்கள் சகிதம் மெழுகுவர்த்திகளை ஏந்தி, அமைதியான முறையில் மௌன அஞ்சலி செலுத்தினர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக சிறப்புப் பிரார்த்தனைகளும் நடைபெற்றன.
பிஞ்சு குழந்தைகளின் இந்த நெகிழ்ச்சியான செயல், உயிரிழந்தவர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், அவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அமைந்தது. விபத்து நடந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தாலும், இந்த குழந்தைகள் காட்டிய மனிதாபிமானம் அனைவரையும் கவர்ந்தது.
பி. ரஹ்மான், கோவை மாவட்டம்.