Advertisment

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பாக திமுக மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

அதிமுக 11 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செய்யக் கோரிய மேல்முறையீட்டு வழக்கை அவரசமாக விசாரிக்க திமுக சார்பில், மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் இன்று வெள்ளிக்கிழமை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவிடம் வலியுறுத்தினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பதவி உயர்வு இட ஒதுக்கீடு விவகாரம்: உச்சநீதிமன்ற ‘கட்டளைப் பேராணை’ என்பது என்ன?

அதிமுக 11 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க மேல்முறையீட்டு வழக்கை அவரசமாக விசாரிக்க வேண்டும் என திமுக சார்பில், மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவிடம் வலியுறுத்தினார்.

Advertisment

தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு மாநில அரசியலில் பல்வேறு எதிர்பாராத அதிரடி திருப்பங்கள் நிறைந்த சம்பவங்கள் அரங்கேறின. அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பதவியை ராஜிநாமா செய்ததோடு, ஜெயலலிதா நினைவிடத்தில் மௌன யுத்தம் நடத்தியது, சசிகலா சிறைக்குச் சென்றது, எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றது, என இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழக அரசயலில் அடுத்தடுத்து சம்பவங்கள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, முதல்வராக பதவியேற்ற எடப்பாடி கே.பழனிசாமி தனது அரசு மீதான நம்பிக்கையை நிரூபிக்க 2017 பிப்ரவரி 18-ம் தேதி சட்டப்பேரவைய்ல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், ஓ.பன்னீர்செல்வம், பாண்டியராஜன், செம்மலை, சண்முகநாதன், நட்ராஜ், ஆறுக்குட்டி, சின்னராஜ், மனோரஞ்சிதம், சரவணன், மாணிக்கம் மற்றும் மனோகரன் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இந்த 11 எம்.எல்.ஏ.க்களும் அதிமுக கொறடா உத்தரவை எதிர்த்து வாக்களித்தனர். ஆனால், சில வாரங்களுக்குப் பிறகு தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கடிதம் கொடுத்தனர்.

இதையடுத்து அந்த 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சபாநாயகரின் உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து, திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஓய்வு பெற்றதால் வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தது. இதனால், இவ்வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என திமுக சார்பிலும், அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த தங்கதமிழ்செல்வன் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டும் இவ்வழக்கு இதுவரை விசாரிக்கப்படவில்லை.

இந்த நிலையில்தான், அதிமுக 11 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செய்யக் கோரிய மேல்முறையீட்டு வழக்கை அவரசமாக விசாரிக்க திமுக சார்பில், மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் இன்று வெள்ளிக்கிழமை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவிடம் வலியுறுத்தினார்.

மேலும், கபில் சிபல் சமீபத்தில், உச்ச நீதிமன்றம் மணிப்பூர் அமைச்சர் வழக்கில் சபாநாயகர் வழங்கும் கால அவகாசம் தொடர்பாக அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் கூறினார்.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு, இதை கவனத்தில் எடுத்துக்கொள்வதாகவும், இந்த வழக்கை அவசர விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். இதனால், 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான மேல் முறையிட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dmk Aiadmk Kapil Sibal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment