ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 89,013 வாக்குகள் பெற்று டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தை பெற்ற அதிமுக வேட்பாளர் மதுசூதனன் வாக்குகளை விட 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் வெற்றிபெற்றார். திமுக வேட்பாளர் மருதுகணேஷ், டிடிவி தினகரன் பெற்ற மொத்த வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கு வாக்குகளை கூட பெற முடியாமல், 24,651 வாக்குகளே பெற்று டெபாசிட்டை இழந்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி, திமுகவும் டிடிவி தினகரனும் கூட்டாக செய்த சதி என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஆர்.கே.நகரில் திமுக அடிப்படை வாக்குகளை கூட பெற முடியாமல் போனது எப்படி என மக்கள் ஆச்சரியமாக பார்க்கின்றனர். பதவி ஆசைக்காக, இப்படியும் சதி செய்வார்களா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பறித்து எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தவே டிடிவி தினகரனும், திமுகவும் கூட்டுச்சதி புரிந்திருக்கின்றனர்.
திமுகவும் அதிமுகவுக்கு துரோகம் விளைவிக்கும் டிடிவி தினகரன் சேர்ந்து செய்துகொண்ட உடன்படிக்கையின் வெளிப்பாடுதான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி. தனது வாக்கு வங்கியை திசை திருப்பி டிடிவி தினகரனை திமுக வெற்றி பெற செய்திருக்கிறது.
திருமங்கலத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, திருமங்கலம் ஃபார்முலாவை திமுக உருவாக்கியது. அதேவழியில், டிடிவி தினகரன் வாக்காளர்களுக்கு நூதன முறையில் பணம் கொடுத்து தினகரன் ஃபார்முலா எனும் சொல்லை சசிகலா குடும்பத்தினர் உருவாக்கியிருக்கின்றனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு தமிழகத்தின் வேறு எந்த தொகுதிக்கும் சற்றும் பொருந்தாது. இந்த வெற்றியால், தொண்டர்களை பிளத்துவிடவோ, கட்சியை யாரும் அசைத்துவிடவோ முடியாது. தமிழகத்துக்கு செய்ய வேண்டிய பணிகளும், திட்டங்களும் நிறைய இருக்கின்றன. அதனை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செய்து முடிக்க வேண்டும்.