இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில், வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் மிசா சட்டத்தில் முதலமைச்சர் மகன் ஸ்டாலின்கூட செய்யப்பட்டிருக்கிறார் என்று வருகிற உண்மைக்கு புறம்பான தகவலை சொல்லும் வசனத்தை நீக்க வேண்டும் என அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் இயக்குனர் பா.இரஞ்சித்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில், நடிகர்கள் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், ஷபீர் உள்ளிட்டோர் நடித்த சார்பட்டா பரம்பரை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படம் வெளியான நாளில் இருந்து பாராட்டுகளும் விமர்சனங்களும் விவாதாங்களும் ஒயாமல் வந்து கொண்டிருக்கின்றன.
குத்து சண்டையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் கதை எமெர்ஜென்சி காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சார்பட்டா பரம்பரையின் குத்துசண்டை வாத்தியார் ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்தில் பசுபதி நடித்துள்ளார். இதில் ரங்கன் வாத்தியார் கதாபாத்திரம் திமுக கட்சிக்காரராக சித்தரிக்கப்பட்டுள்ளது.
படத்தில் கபிலனும் வேம்புலியும் குத்து சண்டை போடும்போது திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரத்தில் ஆர்யா படுகாயம் அடைகிறார். போலீசார் ரங்கன் வாத்தியாரை கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கபிலனிடம் கெவின் டாடி (ஜான் விஜய்) வெளியே என்ன நடக்கிறது என்பதைப் பற்றி சொல்கிறார். அப்போது, “ஆட்சியைக் கலைச்சுட்டாங்க இல்ல, ஏதாவது பண்ணிடுவாங்கனு கட்சிக்காரங்க ஃபெல்லோ எல்லோரையும் அர்ரெஸ்ட் பண்ணிட்டாங்க… ஏதோ மிசா ஆக்ட்டாம், பாவம் கலைஞர் புள்ளை ஸ்டாலினையே தூக்கிட்டாங்களாம், ரங்கன்லாம் எம்மாத்திரம்” என்று கூறுகிறார். இந்த வசனத்தைக் குறிப்பிட்டுதான் அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் நோட்டீஸ் இயக்குனர் பா.இரஞ்சித்துக்கு அனுப்பியுள்ளார்.
தமிழக அரசியலில் கடந்த ஆண்டு திமுக அமைச்சர் பொன்முடியிடம் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்படவில்லை என்று நெறியாளர் கூறியபோது இந்த விவகாரம் விவாதமானது. ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படாரா என்ற விவாதங்கள் சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்து அடங்கிப்போகும்.
இந்த சூழலில்தான், சார்பட்டா பரம்பரை படத்தில் ஸ்டாலின் பற்றிய வசனத்தை நீக்க வேண்டும் என்று சார்பட்டா பரம்பரை தயாரிப்பாளர் இயக்குனர் இரஞ்சித்துக்கும் ஒடிடி தளத்தில் வெளியிட்ட அமேசான் நிறுவனத்திற்கும் அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது குறித்து பாபு முருகவேல் அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது: “சமீபத்தில் இயக்குனர் பா. ரஞ்சித் வெளியிட்ட சார்பட்டா பரம்பரை ஒரு வரலாற்று படமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது அந்தப்படத்தில் வரலாற்று நிகழ்வுகளை தவறாக மக்களிடத்திலே பரப்புகின்ற விதமாகவும் உண்மைக்கு மாறான விஷயங்களை, வரலாற்றுச் சம்பவங்களில் இல்லாத ஒரு விஷயத்தை யாரையோ ஒரு நபரை திருப்திப் படுத்த வேண்டும் என்பதற்காக நடக்காத ஒரு விஷயத்தை எந்த ஒரு அரசு ஆவணமும் இதுவரை நிரூபிக்காத ஒரு விஷயத்தை சம்பந்தப்பட்ட நபர்களே இதுவரை நிரூபிக்காத ஒரு விஷயத்தை அந்தப்படத்தில் சொல்லியிருக்கிறார். ஒரு வரலாற்று படம் என்று கூறிவிட்டு உண்மைக்குப் புறம்பான செய்திகளை மக்களிடத்திலே பரப்புவது சட்டத்திற்கு புறம்பான விஷயம். இது மக்களிடத்திலேயும் அரசியலிலே உண்மையாக உழைத்து மக்களுக்காக பணி செய்தவர்கள் இடத்திலேயும் தவறான எண்ணத்தையும் செய்தியையும் பரப்புவதாக அமைந்துவிடும்.
1970ம் ஆண்டு கால கட்டங்களில் நடைபெறக்கூடிய கதையாக அந்தப் படம் எடுக்கப்பட்டு இருக்கின்றபோது அப்போது முதலமைச்சராக கருணாநிதி இருந்தார். அந்த படத்தின் ஒரு மணி 45 நிமிடம் 17ஆவது நொடியில் முதலமைச்சர் மகன்கூட மிசாவில் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று ஒரு வசனம் வருகிறது. இது உண்மைக்கு மாறான தகவல். இந்த வசனத்தின் அடிப்படையில் அது தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆக சித்தரிக்கப்படுகிறது. ஸ்டாலின் 1971ம் ஆண்டு மிசா காலங்களில் கைதுசெய்யப்பட்டாரே தவிர மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை.
எனவே இந்த செய்தியானது அரசியல் காரணங்களுக்காக ஸ்டாலினை முன்னிலைப் படுத்த வேண்டும் என்பதற்காக உண்மைக்கு மாறான தகவலை சொல்லியிருக்கிறீர்கள். இந்த வசனம், உண்மையாகவே மிசா சட்டம் மூலம் கைது செய்யப்பட்டவர்களில் மனதில் ஒரு பெரிய வருத்தத்தையும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மிசாவை பற்றி விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட கமிஷனின் அறிக்கைகளையும் அந்த அறிக்கையின் 575 பக்கங்களிலும் ஸ்டாலினுடைய பெயர் எந்த இடத்திலும் பதிவாகவில்லை. நிரூபிக்ப்படவில்லை நீதியரசர் ஷா கமிஷனின் அறிக்கையின்படி ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை என்று பட்டவர்த்தனமாக புலப்படுகிறது. இது சம்பந்தமாக பல விவாதங்களிலேயும், பல அரசியல் தலைவர்களின் கேள்விகளுக்கும் இதுநாள் வரை அதை நிரூபிக்கும் விதமாக அல்லது அதை மறுத்து கூறுகின்ற விதமாக ஸ்டாலின் அவர்களோ அவருடன் சார்ந்தவர்களோ எந்தவிதமான அறிக்கையோ சான்றுகளையோ இது காரும் வரை தெரியப்படுத்தவில்லை. இதுதொடர்பாக நாளிதழ்களில் செய்தி வந்தபோது பல தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்திய போதும் இந்தக் கூற்றை நிரூபிக்கும் விதமாக திமுகவில் இருந்து யாருமே ஆதாரங்களை நிரூபிப்பதாக இல்லை. ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் ஸ்டாலின் நீதிபதி ஷா கமிஷன் அறிக்கையை படித்ததில்லை என்று கூறியிருக்கிறார்.
இவ்வாறு தவறான தகவல்களை ஒரு திரைப்படத்தின் வாயிலாக அதுவும் பீரியட் பிலிம் என்று எடுத்துவிட்டு கடந்த 40 ஆண்டுகளாக திமுகவைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து கூறிவரும் உண்மைக்குப் புறம்பான ஒரு தகவலை உறுதிப்படுத்தும் விதமாக நீங்கள் எடுத்திருக்கும் இந்தப் படம் அமைந்திருக்கிறது. இது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 505 கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்து தண்டிக்கப்படக் கூடிய குற்றமாக நான் கருதுகிறேன். அதனால், இந்த வழக்கறிஞர் நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 48 மணி நேரத்திற்குள்ளாக நீங்கள் சொன்ன அந்த செய்திகள் எந்தவித ஆதாரமும் இல்லாமல் எந்தவித அடிப்படையும் இல்லாமல் திரைப்படத்திற்காக எடுக்கப்பட்டது என்பதை அனைத்து ஆங்கில மற்றும் தமிழ் நாளேடுகளில் பிரசுரித்து வெளியிட வேண்டும் அல்லது அந்த திரைப்படத்தில் வரக்கூடிய குறிப்பிட்ட அந்த வசனத்தை உடனடியாக நீக்கி மறுவெளியீடு செய்ய வேண்டும். தவறுகின்ற பட்சத்தில் உங்களின் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பை நீங்களே வழங்கி விட்டீர்கள் என்பதாக எடுத்துக்கொண்டு அதற்கான அனைத்து விளைவுகளையும் நீங்கள் சந்திக்க வேண்டும் என்பதை இதன் மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறேன்” என்று வழக்கறிஞர் பாபு முருகவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வழக்கறிஞர் பாபு முருகவேலிடம் தமிழ் இந்தியன் எக்ஸ்பிறஸில் இருந்து பேசினோம். சார்பட்டா பரம்பரை படம் தொடர்பாக நீங்கள் இயக்குனர் பா.இரஞ்சித்துக்கு அனுப்பிய நோட்டீஸ் அதிமுக தலைமையின் அனுமதியுடன் தான் அனுப்பியுள்ளீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த பாபு முருகவேல், இந்த நோட்டீஸ் கட்சி சார்பில் அனுப்பப்படவில்லை. நான் ஒரு வழக்கறிஞராக தனிப்பட்ட முறையில் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன் என்று கூறினார். நோட்டீஸ் அனுப்பிய பிறகு, அதிமுக தலைமை இடம் இருந்து ஏதெனும் தகவல் வந்ததா என்ற கேள்விக்கு பதிலளித்த பாபு முருகவேல், அது கட்சி விவகாரம் அதை சொல்ல முடியாது என்றார். மேலும், இந்த நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளேன். இதுவரை எந்த பதிலும் வரவில்லை. பதில் வராத பட்சத்தில் வழக்கு தொடர்வேன் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“