Advertisment

முறிந்தது அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி: இ.பி.எஸ் தலைமையில் அதிகாரபூர்வ தீர்மானம்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பா.ஜ.க உடனான கூட்டணியை அ.தி.மு.க முறித்துக் கொண்டதாக அதிகாரப் பூர்வமாக தீர்மானம் நிறைவேற்றி அறிவித்துள்ளது. 

author-image
WebDesk
New Update
Edappadi Palaniswami Tweet that there is shortage of oxygen equipment in Kanchipuram Government Hospital

முறிந்தது அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி: இ.பி.எஸ் தலைமையில் அதிகாரபூர்வ தீர்மானம்

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில், பா.ஜ.க உடனான கூட்டணியை அ.தி.மு.க முறித்துக் கொண்டதாக அதிகாரப் பூர்வமாக தீர்மானம் நிறைவேற்றி அறிவித்துள்ளது. 

Advertisment

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி அமைத்து வந்தன. கூட்டணியில் இருந்தாலும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதா குறித்து, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் குறித்தும் அவ்வப்போது விமர்சனம் செய்தார். இதற்கு, அ.தி.மு.க தலைவர்கள் கடும் எதிர்வினையாற்றினர். 

சமீபத்தில், பா.ஜ.க நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை, “1956-ல் மதுரையில் நடந்த விழாவில், பகுத்தறிவு கருத்தைப் பேசிய அண்ணாவை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கண்டனம் தெரிவித்து, அண்ணா மன்னிப்பு கேட்காவிட்டால் மீனாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகத்துக்கு பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என எச்சரித்ததால் உடனே பயந்து அண்ணாவும் பி.டி. ராஜனும் மன்னிப்பு கேட்டு ஓடிப் போனார்கள்” என்று பேசியது பெரும் சர்ச்சையானது. 

அண்ணாவின் பெயரில் அமைந்த திராவிடக் கட்சியான அ.தி.மு.க அண்ணாமலையின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அ.தி.மு.க மூத்த தலைவர் டி. ஜெயக்குமார், அண்ணாமலை கூட்டணி தர்மத்தை மீறுகிறார். அண்ணாவைப் பற்றி பேசியதற்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி அண்ணாமலைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அதோடு, பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என்று கூறினார். ஆனால், பா.ஜ.க தரப்பில் சில தலைவர்கள் அ.தி.மு.க உடன் கூட்டணி தொடரும் என்று கூறினார்கள்.  இதனால், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தொடர்கிறதா? இல்லை முறிந்ததா என்ற குழப்பம் நிலவியது.

இதனிடையே, அ.தி.மு.க தலைவர்கள் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஒரு குழு டெல்லி சென்று பா.ஜ.க தலைவர்களை சந்தித்தனர். அ.தி.மு.க தலைவர்கள் டெல்லி சென்றது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்த நிலையில், அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க உடனான கூட்டணி குறித்து விவாதிக்கப்படும் என்று பேசப்பட்டது.

அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க மாவட்ட செயலாலர்கள் கூட்டம் இன்று (செப்டம்பர் 25) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பெரும்பாலான அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் பா.ஜ.க உடனான கூட்டணி வேண்டாம் என்று கூறியதை அடுத்து,  பா.ஜ.க கூட்டணியில் இருந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதையடுத்து, அ.தி.மு.க தலைமை பா.ஜ.க உடன் கூட்டணி முறிந்தது என்று அதிகாரப்பூர்வமாக தீர்மானம் நிறைவேற்றி அறிவித்துள்ளது.

ஆ

அ.தி.மு.க தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க மாநிலத் தலைமை, கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டே வேண்டுமென்றே உள்நோகத்தோடு, அ.தி.மு.க மீதும், எங்களுடைய கழக தெய்வங்களை பேரறிஞர் அண்ணா, அம்மா (ஜெயலலிதா) ஆகியோரை அவதூறாகப் பேசியும் எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது. 

மேலும், பா.ஜ.க மாநிலத் தலைமை கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற  வரலாற்றுச் சிறப்பு மிக்க அ.தி.மு.க வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைபடுத்தியும் 2 கோடிக்கு மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும் எங்கள் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்த செயல் கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்  மாளிகையில் இன்று மாலை (25.09.2023) திங்கட்கிழமை கழகப் பொது செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னால் முதலமைச்சர் புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும் விருப்பத்திற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அ.தி.மு.க இன்று முதல் பா.ஜக கூட்டணியில் இருந்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது” என்று அறிவித்துள்ளது.

அ.தி.மு.க மாவ்ட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் கே.பி. முனுசாமி கூறியதாவது: பா.ஜ.க தலைமை கடந்த ஒரு வருடமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அ.தி.மு.க மீதும், அண்ணா, ஜெயலலிதா மீது அவதூறாகப் பேசி, கொள்கைகளை விமர்சித்து வருகிறது. மதுரையில் நடைபெற்ற எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பா.ஜ.க மாநிலத் தலைமை விமர்சித்தது தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

அதனால், அ.தி.மு.க இன்று முதல் பா.ஜ.க-வில் இருந்தும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது. 

2024 நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்ற கூட்டணியோடு, இணைந்து அ.தி.மு.க தேர்தலை சந்திக்கும். 100-க்கு 100 சதவீதம் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவு, பா.ஜ.க உடன் கூட்டணி இன்றைக்கும் இல்லை என்றைக்கும் இல்லை.” என்று கூறினார். 

இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வின் எக்ஸ் பக்கத்தில், “அ.தி.மு.க பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து அ.இ.அ.தி.மு.க இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது.” என்று அறிவித்து #நன்றி_மீண்டும்வராதீர்கள் என்று ஹேஷ்டேக் உண்ட அறிவித்துள்ளார்கள்.

அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தவுடன் அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே அ.தி.மு.க தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

பா.ஜ.க கூட்டணியில் இருந்து அ.தி.மு.க வெளியேறி இருப்பது தமிழக அரசியலில் மட்டுமல்லாமல், தேசிய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment