தமிழ்நாட்டில் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் தற்போது பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேரறிஞர் அண்ணா குறித்துப் பேசியது சர்ச்சையானது. இதற்கு
அ.தி.மு.க, பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அ.தி.மு.கவின் முக்கிய தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுப்போம். இப்போது அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இல்லை என்று கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து கோவையில் பா.ஜ.கவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
எனினும் இவ்விவகாரத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க தேசிய தலைமை என யாரும் இதுவரையில் பதில் அளிக்கவில்லை. இரு கட்சி தலைமையும் மௌனம் காக்கிறது. இதனால் கட்சிகளுக்கு இடையே சலசலப்பு நீடிக்கிறது.
இந்நிலையில் தூத்துக்குடி பகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விடுதலை எனக் கூறி பா.ஜ.கவினர் கொண்டாடத்தில் ஈடுபட்டனர். கையில் பா.ஜ,க கொடி உடன் விடுதலை விடுதலை, அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விடுதலை என கோஷமிட்டனர். தொடர்ந்து அ.தி.மு.க ஜெயக்குமாருக்கு எதிராக முழக்கமிட்டனர். பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
தொடர்ந்து, தூத்துக்குடி அதிமுக நிர்வாகிகள் பூத் கமிட்டி கூட்டம் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பாஜக மேலிடம் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும். அதுவரை கூட்டணி குறித்து பேசக்கூடாது. அதிமுகவினர் பாஜக குறித்து விமர்சனம் செய்யக் கூடாது எனக் கூறினார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, கூட்டணியில் யார் இருப்பது, யார் தலைமை என கட்சி தேசிய தலைமை தான் முடிவு எடுக்கும் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“