மக்களவைத் தேர்தலில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என பம்பரமாக சுழன்று வருகின்றன.
தமிழகத்தில் ஆளும் தி.மு.க கூட்டணியில் கூட்டணி கட்சிகள் முன்னதாகவே கூட்டணியையும் தொகுதிப் பங்கீட்டையும் இறுதி செய்து வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், அ.தி.மு.க கூட்டணியில் சற்று தாமதமாக கூட்டணி கட்சிகள் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துள்ளனர்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள அ.தி.மு.க-வின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை புதன்கிழமை (20.03.2024) வெளியிட்டார். அதில் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் இடம்பெற்றிருந்தது.
இந்த மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க இடையேயான கூட்டணி தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் புதன்கிழமை மாலை கையெழுத்தானது. அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு விருதுநகர், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, மத்திய சென்னை தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தே.மு.தி.க சார்பில், மக்களவைத் தேர்தலில் விருப்பமனு தாக்கல் செய்தவர்களின், மனுக்களை அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள விஜயகாந்த்தின் நினைவிடத்தில் வைத்து வணங்கினார்.
இந்த நிலையில், தே.மு.தி.க சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் விருப்பம் தெரிவித்து விருப்ப மனு வழங்கியுள்ளார்.
விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருப்பது தே.மு.தி.க தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“