Advertisment

சொத்து வரி உயர்வு: சட்டப்பேரவையில் திமுகவை திணறடிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்

தமிழக சட்டப்பேரவை புதன்கிழமை கூட உள்ள நிலையில், சொத்து வரி உயர்வு, வன்னியர்கள் 10.5% உள் ஒதுக்கீடு ரத்து உள்ளிட்ட விவகாரங்களை சட்டப்பேரவையில் எழுப்பி திமுகவை திணறடிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

author-image
WebDesk
New Update
AIADMK and BJP ready to counter DMK, TN Assembly, DMK, property tax hike issue, opposition counter dmk, சொத்து வரி உயர்வு, வன்னியர் 10 5 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து, சட்டப்பேரவையில் திமுகவை திணறடிக்க எதிர்க்கட்சிகள் திட்டம், தமிழக சட்டப்பேரவை, பாஜக, அதிமுக, திமுக, AIADMK and BJP ready to counter DMK about property tax hike issue

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்வு மற்றும் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% உள் ஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் ரத்து செய்து அளித்த தீர்ப்பு உள்ளிட்ட விவகாரங்களை தமிழக சட்டப்பேரவையில் எழுப்பி திமுகவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment

அண்மையில் தமிழக அரசு, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி 150% வரை உயர்த்தப்படுவதாக அறிவித்தது. சொத்து வரி உயர்வைக் கண்டித்து, அனைத்து மாவட்டத் தலைமை இடங்களிலும் அதிமுக செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 5) மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. அதே போல, மற்றொரு எதிர்க்கட்சியான பாஜக அனைத்து மாநகராட்சிகளிலும் சொத்து வரி உயர்வைக் கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் முறை முடிவடைவதால், இந்த நிதியாண்டில் ரூ. 20,000 கோடி பற்றாக்குறையை எதிர்நோக்கும் மாநில அரசு, இதற்கு 15வது மத்திய நிதிக் குழு மற்றும் மத்திய அரசின் வரித் சீர்திருத்தம்தான் காரணம் என்று குற்றம் சாட்டி வருகிறது.

சொத்து வரி உயர்த்தப்பட்டது குறித்து ஆளும் கட்சி தரப்பில், சென்னையில் சொத்து வரி கடைசியாக 1998-ம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது. 2008-ல் மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி மாற்றி அமைக்கப்பட்டது என்று கூறுகின்றனர். ஆனால், எதிர்க்கட்சிகள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

மேலும், தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டது குறித்து நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஏப்ரல் 2-ம் தேதி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, 15-வது நிதி ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மத்திய அரசின் நிதியைப் பெறுவதற்காகவே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

சொத்து வரியை உயர்த்தாவிட்டால் மத்திய நிதி விடுவிக்க முடியாது எனவும் திருத்தம் செய்யாவிட்டால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான 15,000 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட வாய்ப்பில்லை. இதனால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும். இது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டைவிட பிற மாநிலங்களில் 50 முதல் 100 சதவீதம் சொத்து வரி அதிகம். இந்த விவகாரத்தில் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படாத வகையில் சீராய்வு செய்ய வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்” என்று கூறினார்.

கே.என்.நேருவின் கருத்துக்கு பதில் அளித்து அறிக்கை வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “மத்திய அரசு கூறியதால்தான் வரியை உயர்த்தினோம் என அமைச்சர் கே.என்.நேரு குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு வழங்கிய ஆணையில் அவ்வாறு எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. குறைந்தபட்ச நில அளவைக்கு ஏற்ப வரி விகிதாச்சார அளவுகளை குடியிருப்பு, வணிகம் மற்றும் தொழில்சார்ந்த பகுதிகளைப் பிரித்து அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப வித்தியாசங்களுடன் வரி விகிதங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து வரியை தன்னிச்சையாக உயர்த்திவிட்டு மக்களைச் சந்திக்கத் துணிவு இல்லாமல் மத்திய அரசின் மீது கோழைத்தனமான பொய்யான புகாரை தெரிவித்து திசை திருப்ப முயற்சி செய்யும் தமிழ்நாடு அரசின் கபட நாடகத்தை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில்தான், தமிழ்நாடு சட்டப்பேரவை புதன்கிழமை மீண்டும் கூடுகிறது. சொத்து வரி உயர்வு, வன்னியர்கள் 10.5% உள் ஒதுக்கீடு ரத்து உள்ளிட்ட விவகாரங்களை சட்டப்பேரவையில் எழுப்பி திமுகவை திணறடிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

“சொத்து வரியை உயர்த்துமாறு மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்காத நிலையில், மத்திய அரசை மாநில அரசு எப்படி குற்றம் சாட்டலாம், பணவீக்கத்தால் மக்கள் ஏற்கனவே சிரமங்களை சந்தித்து வருகின்றனர். சொத்து வரி உயர்வு அவர்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும்” என பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சொத்து வரி உயர்வுக்கு திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளும் அதிருப்தி தெரிவித்துள்ளன. மேலும், சொத்து வரி உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என இடதுசாரி கட்சிகளான சி.பி.ஐ, சி.பி.எம் கோரிக்கை விடுத்துள்ளன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bjp Dmk Aiadmk Tamilnadu Assembly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment