கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புகளை தடுக்க தவறியதற்காக தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று (ஜுன் 27) உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் விஷ சாராயம் குடித்ததில் 6 பெண்கள் உட்பட 63 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம், கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புகளை தடுக்க தவறியதற்காக தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி விஷச் சாரய மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரியும், தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் அதி.மு.க சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அ.தி.மு.க.வினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை அனுமதி
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக அ.தி.மு.க-வினர் உண்ணாவிரதம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு பதிலாக எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே போராட்டத்தில் பங்கு கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதோடு போராட்டத்திற்கு சென்னை மாநகர காவல்துறை 23 நிபந்தனைகள் விதித்துள்ளது. உண்ணாவிரதப் போராட்டம் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும். போராட்டம் நடத்தும் இடத்திற்கு எந்த காரணத்தை கொண்டும் வாகனங்களை கொண்டுவரக்கூடாது.
பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காவல் அதிகாரிகள் குறிப்பிடும் இடத்தில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். அரசியல் தலைவர்கள், தனிப்பட்ட நபர்கள், அரசு அதிகாரிகளை தாக்கி பேசவோ, முழக்கம் எழுப்பவோ கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“