தமிழக அரசியலில், அதிமுக - பாஜக இயல்பான கூட்டணி என்று பேசப்பட்டு வந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்து அதிமுக - பாஜக கூட்டணி முறிவை தெரிவித்தார்.
நகப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக - பாஜக இடையே சீட் பங்கீடு தொடர்பாக கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூக முடிவு எட்டாத நிலையில் அதிமுக அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வந்தது. இதனால், பேச்சுவார்த்தைக்கு பிறகு வெளியே வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக தனித்து போட்டியிடும் என்று அறிவித்தார்.
கூட்டணி முறிவுக்கு காரணம், அதிமுக ஒருபுறம் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே மறுபுறம் வேட்பாளர்களை அறிவித்ததால் அதிருப்தி அடைந்த பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக பாஜக தரப்பில் தெரிவிக்கின்றன. உண்மையில், பாஜக வெளியேறிய பின்னணி என்ன? கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே அதிமுக வேட்பாளர்களை அறிவித்தது ஏன்?
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், ஆளும் திமுகவுக்கு எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் இடையேதான் நேரடி போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்த தேர்தலில், பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.
இருப்பினும், திமுக மற்றும் அதிமுக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் இடங்கள் பங்கீடு குறித்து தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
ஆளும் திமுகவில், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், உயர்மட்ட நிர்வாகிகள், மாவட்ட அளவில் தங்கள் கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவை எட்டி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.
எதிர்க்கட்சியான அதிமுகவில் அக்கட்சியின் தலைமை அலுவலகமான, எம்.ஜி.ஆர் மாளிகையில், அதிமுக - பாஜக கட்சித் தலைவர்களுக்கிடையே இடங்கள் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார் ஆகியோர் அதிமுக தரப்பில் கலந்துகொண்டனர். பா.ஜ.க தரப்பில் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, மேலிடப் பார்வையாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இடங்கள் பங்கீடு குறித்த இந்த பேச்சுவார்த்தை 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இருப்பினும், முடிவுகள் எட்டப்பட்டதாக அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், பேச்சுவார்தைக் கூட்டம் முடித்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, “கூட்டணியில் அதிமுக பெரிய கட்சியாக உள்ளது. அதேநேரம், நகர்ப்புறங்களில் பாஜக வலிமையாக உள்ளது. அதைவைத்து எங்களுக்குச் சாதகமான இடங்களை ஒதுக்குமாறு கோரியுள்ளோம்'” என்று கூறினார்.
பாஜகவுடனான பேச்சுவார்த்தை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “தங்களுக்குச் சாதகமான இடங்களைக் கேட்பது அவர்களின் கடமை. அதனை ஏற்றுக்கொள்ளுவது என்பது எங்களின் முடிவு. அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம். கட்சியின் நலனைப் பொறுத்து இடப்பங்கீடு அமையும்” என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, அதிமுக சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 31) மாலை வெளியிடப்பட்டது. கடலூர் மாநகராட்சி, சிதம்பரம் நகராட்சி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாச்சலம், திட்டக்குடி, விழுப்புரம், திண்டிவனம், தர்மபுரி உள்ளிட்ட நகராட்சிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
அதே நேரத்தில், அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில், கடலூர் மாநகராட்சியில் 3 வார்டுகள் தவிர்த்தும், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, தர்மபுரி ஆகிய நகராட்சிகளில் தலா ஒரு வார்டு தவிர்த்தும் மற்ற நகராட்சிகளுக்கு அதிமுக சார்பில், முழுவதுமாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அதிமுக இரண்டாம் கட்டமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது குறித்து அதிமுக வட்டாரங்கள் கூறுகையில், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் 20 சதவிகித இடங்களை பாஜகவினர் கேட்டார்கள். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அதிகமான இடங்களை கேட்டார்கள். கோயம்புத்தூர், நாகர்கோவில், ஓசூர் உள்ளிட்ட சில மாநகராட்சி மேயர் பதவிகளை கேட்டார்கள். அதற்கு அதிமுக தரப்பில் அப்படியெல்லாம் வழங்கமுடியாது என்று கூறினோம். இதையடுத்து, பாஜக தலைவர்களிடம் நீங்கள் மாவட்ட அளவில் நிர்வாகிகளுடன் ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்திவிட்டு முடிவுக்கு வாருங்கள் என்று கூறினோம்.” என்று கூறினார்.
ஆனால், அதிமுக அதற்குள்ளாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டது ஏன் என்ற கேள்விக்கு அதிமுக வட்டாரங்கள் கூறுகையில், “அது அம்மாவின் ஸ்டைல். நாங்கள் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை அறிவித்தோம். ஒருவேளை பாஜக இறங்கிவந்திருந்தால், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட சில இடங்களில் வாபஸ் வாங்கிக்கொள்ளலம் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால், அதற்குள் பாஜகவினர் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து விட்டனர். அதிமுக கூட்டணியைவிட்டு பாஜக போனாலும், எங்கள் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம், சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் உள்ளன. அவர்களுக்கு சில இடங்களை ஒதுக்கி இருக்கிறோம். கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவரும் இரட்டை இலைச் சின்னத்திலேயே போட்டியிடுகிறார்கள்.” என்று தெரிவித்தனர்.
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜக தனித்து போட்டியிட்டது குறித்து பாஜகவினர் கூறுகையில், “பாஜகவில் மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்திதான் எங்களுக்கு தேவையான இடங்களைக் கேட்டோம். ஆனால், கேட்ட இடங்களைக் கொடுக்க மறுத்துவிட்டனர். பேச்சுவார்த்தையின்போது, எங்களிடம் மீண்டும் மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தச் சொன்னார்கள். அது சரியாக இருக்காது என்பதால்தான் பாஜக தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்திருக்கிறது.” என்று தெரிவித்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.