அதிமுக கூட்டணி இவ்வளவு வேகமா..? தொகுதி பங்கீடு முக்கிய 10 பாயிண்டுகள்

கனிமொழி, ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸுக்கான தொகுதி எண்ணிக்கையை இறுதி செய்யும் பணியில் இறங்கினார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு விறுவிறுப்பு அடைந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக.வுடன் யாரும் கூட்டணி வைக்க முன்வர மாட்டார்கள் என்கிற குரல்கள் எதிரொலித்தன.

ஆனால் இன்று (பிப்ரவரி 19) அடுத்தடுத்து கூட்டணிப் பேச்சுவார்த்தையில் விறுவிறுப்பு காட்டி அசரடித்தது அதிமுக! இந்தக் கூட்டணி ஜெயிக்குமா, ஜெயிக்காதா? என்கிற விவாதம் ஒருபுறம் இருக்கட்டும். இவ்வளவு வேகமாக அடுத்தடுத்து பாமக.வையும், பாஜக.வையும் அதிமுக தனது அணிக்குள் இழுத்ததை எதிர்க்கட்சிகளே எதிர்பார்க்கவில்லை. தேமுதிக.வுடன் நடந்த பேச்சுவார்த்தை தனி!

இதற்கிடையே டெல்லியில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸுக்கான தொகுதி எண்ணிக்கையை இறுதி செய்யும் பணியில் இறங்கினார். பரபரப்பான இந்தத் தொகுதி பங்கீட்டின் இன்றைய நிகழ்வுகளான 10 முக்கிய அம்சங்களை காணலாம்.

காலை 11 மணி: பாஜக.வுடன் அதிமுக கூட்டணியை இறுதி செய்கிறது, அதற்காக அமித்ஷா வருகிறார் என செய்திகள் பறந்த நிலையில், திடுதிப்பென டாக்டர் ராமதாஸ் தனது பரிவாரங்களுடன் வந்து அதிமுக அணியுடன் கூட்டணியை இறுதி செய்தார்.

பாமக.வுக்கு மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்குவதாக இரு தரப்பும் ஒப்பந்தம் செய்தன.

பகல் 12 மணி: அமித் ஷா வருகை ரத்தாகி, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வந்தார். பாமக கூட்டணி இறுதி செய்யப்பட்ட அதே ஆழ்வார்பேட்டை கிரவுன் பிளாஸா ஹோட்டலில் அதிமுக தலைவர்களை பியூஸ் கோயல் சந்தித்தார். நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நீடித்தது.

பகல் 1 மணி: பாமக.வுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என டாக்டர் ராமதாஸ் கூறினார்.

பகல் 1.30 மணி: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது என அதிமுக – பாமக கூட்டணி குறித்து திருமாவளவன் கூறினார்.

பகல் 2.00: அதிமுக-பாமக கூட்டணி குறித்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘2009-ம் ஆண்டு தேர்தலில் தோற்றுப்போன கூட்டணி பாமக-அதிமுக கூட்டணி. அதிமுக ஆட்சியை விமர்சித்து அண்மையில் புத்தகம் வெளியிட்டவர் பாமக தலைவர் ராமதாஸ்’ என கூறினார் ஸ்டாலின்.

மாலை 3.00: திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சு முடியும் நிலையில் வந்துவிட்டது; காங்கிரசுக்கு தொகுதிகள் ஒதுக்குவது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

மாலை 4.00 மணி: திமுக அணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எண்ணிக்கை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி 2-வது நாளாக சந்தித்து பேசினார்.

தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், தங்கபாலு, கே.ஆர்.ராமசாமி ஆகியோர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினர். கனிமொழி தெரிவித்த தொகுதி பங்கீடு விவரங்களை தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் பகிர்ந்தார்.

மாலை 5.00 மணி: சென்னை ஆழ்வார்பேட்டை, கிரவுன் பிளாஸா ஹோட்டலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் அதிமுக தலைவர்கள் நடத்திய கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு முடிவானது.

அதன்படி பாஜக.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது. வர இருக்கிற 21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக.வுக்கு பாஜக ஆதரவு தெரிவிப்பது என்றும் முடிவானது.

மாலை 6:00 : தமிழகம், புதுச்சேரியில் நாற்பதும் நமதே என்ற முழக்கத்தோடு தேர்தலை சந்திப்போம் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

மாலை 6.30: தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்த பியூஷ் கோயல், உடல் நலம் குறித்து விசாரிக்க விஜயகாந்தை சந்தித்ததாக கூறினார். எல்லா சந்திப்புகளும் அரசியல் ரீதியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை என்றும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close