அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி அறிவிப்பின்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2026-ல் அ.தி.மு.க - பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என்று கூறிய நிலையில், 2026-ல் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி ஆட்சியா என்ற கேள்விக்கு இ.பி.எஸ் மறுத்த நிலையில், நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ல் நடைபெற உள்ளதையொட்டி, தமிழக அரசியலில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா - அ.தி.மு.க பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியை உறுதி செய்து அறிவித்தனர்.
அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியை அறிவித்துப் பேசிய அமித்ஷா, “அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி உறுதியாகி உள்ளது. இதில் எந்தக் குழப்பமும் இல்லை. இ.பி.எஸ் தலைமையிலேயே கூட்டணி. யாருக்கு எத்தனை தொகுதி, வெற்றிபெற்ற பின் எப்படி ஆட்சியமைப்பது என்பது பின்னர் விவாதிக்கப்படும். அ.தி.மு.க எந்த நிபந்தனையும் வைக்கவில்லை. 2026 தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி ஆட்சிதான். தேர்தல் விஷயங்களில் இணைந்து செயல்படுவோம்” என்று கூறினார்.
இந்த நிலையில், 2026 தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி ஆட்சிதான் என்று அமித்ஷா கூறியது குறித்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “பா.ஜ.க-வுடன் கூட்டணி மட்டுமே; தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா கூறவில்லை. நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். டெல்லிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி என்றுதான் அமித்ஷா கூறினார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா கூறவில்லை. முதற்கட்டமாக பா.ஜ.க கூட்டணி சேர்ந்துள்ளது. இன்னும் பல கட்சிகள் கூட்டணிக்கு வரவுள்ளன.” என என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதற்கிடையே, தமிழக பா.ஜ.க தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட நயினார் நாகேந்திரன் முறைப்படி பா.ஜ.க மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரனிடம், எடப்பாடி பழனிசாமி கூட்டணி தொடர்பாக பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இடற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி பற்றி மத்திய தலைமைதான் முடிவு செய்யும். உள்துறை அமைச்சரும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து முடிவு செய்வர்” எனத் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க - பா.ஜ.க இடையே கூட்டணி உறுதியான சில நாட்களிலேயே, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா கூறவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது, பா.ஜ.க-வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.