அதிமுக – பாஜக கூட்டணி: இருக்கிறதா? இல்லையா?

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என்று கூறிய நிலையில், அதிமுக எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் இல்லாத கூட்டணியை உருவாக்காதீர்கள் என்று கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

By: Updated: September 21, 2020, 09:44:09 PM

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என்று கூறிய நிலையில், அதிமுக எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் இல்லாத கூட்டணியை உருவாக்காதீர்கள் என்று கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்த வரை 2016 சட்டமன்ற தேர்தலைப் போல இல்லாமல், கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலும் இடைத் தேர்தல்களும் திமுக – அதிமுக தலைமையில் கூட்டணிகள் அமைந்திருந்தது.

கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக, தமாக ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. அதே போல, திமுக தலைமையில் மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கொங்குநாடு ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணியே விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டமன்றத் தேர்தல்களிலும் தொடர்ந்தது.

வருகிற 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என்று அரசியல் நோக்கர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

அதை கட்டியம் கூறும் வகையில், இன்று (செப்டம்பர் 21) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர். மேலும், வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து செப்டம்பர் 28ம் தேதி ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்துள்ளனர்.

ஆனால், அதிமுக தலைமையிலான கூட்டணியில் அவ்வப்போது சலசலப்பு எழுந்த வண்ணம் உள்ளது. பாஜக தலைவர்கள் சிலர் அவ்வப்போது அதிமுகவை விமர்சித்து வருகின்றனர். கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, கூட்டணி தேர்தல் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று அறிவித்தார்.

அதே நேரத்தில், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சிதான் நடைபெறும் என்று கூறினர்.

இதனிடையே, பாஜகவின் மாநில தலைவராக பதவியேற்ற எல்.முருகன், அதிமுக – பாஜக கூட்டணியை சுமூகமாக கொண்டு செல்லவே முயற்சி செய்கிறார் என்பது அவரது பேச்சுகளில் வெளிப்படுகிறது.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜக – அதிமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என்று கூறினார். அவர் பேட்டி அளித்த சில மணி நேரங்களில் அதிமுக மாநிலங்களவை எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், இல்லாத கூட்டணியை உருவாக்காதீர்கள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் மசோதாவை விமர்சித்து பேசிய எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், அதன் மசோதாவின் சில அம்சங்களை விமர்சித்து எதிர்த்துப் பேசினார். மக்களவையில் அதிமுக எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் வேளான் மசோதா ஆதரித்து பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், ஓ.பி.ரவீந்திரநாத் புதிய உறுப்பினர் என்பதால் வேளாண் மசோதாவை ஆதரித்துப் பேசினார் என்று கூறினார். மேலும், அதிமுக – பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், இல்லாத கூட்டணியை உருவாக்காதீர்கள். பாஜகவின் அரசில் அதிமுகவினர் அமைச்சர் பதவியை ஏற்று அங்கம் வகிக்கிறார்களா? அல்லது தமிழகத்தில் அதிமுக அரசில் பாஜகவினர் அமைச்சர்களாக இருந்து அங்கம் வகிக்கிறார்களா என்று கேள்வி எழுப்பினார்.

அதிமுக எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்தின் இந்த பேட்டி அதிமுக – பாஜக உறவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கே.டி.ராகவன் ஊடகங்களில் கருத்து தெரிவிக்கையில், அதிமுக தலைமை கூட்டணி இல்லை என்று முறையாக அறிவிக்கட்டும் அதற்குப்பிறகு நாங்கள் எதிர்வினையாற்றுகிறோம் என்று கூறினார்.

அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறுகையில், கூட்டணி குறித்து அதிமுக தலைமைதான் முடிவெடுக்கும் என்று கூறினார்.

இதனிடையே, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சசிகலா சிறையில் இருந்து விடுதலையானால் அதிமுகவில் நிறைய மாற்றம் வரும் ஏனென்றால், அதிமுகவில் சசிகலாவால் அமைச்சர் பதவி பெற்றவர்கள் நிறைய உள்ளனர் என்று கூறினார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்து சசிகலாவால் யாரும் அமைச்சர் பதவி பெறவில்லை என்று கூறினார்.

அதே போல, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் 2025இல் கோட்டையில் காவி கொடி பறக்கும் என்று கூறியது குறித்து கருத்து தெரிவித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் தேசியக் கொடிதான் பறக்கும் என்று கூறி கவுண்ட்டர் கொடுத்தார்.

இப்படி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அதிமுக – பாஜக கூட்டணியில் பிரச்னை இல்லை என்று கூறிய நிலையில், அதிமுக எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் இல்லாத கூட்டணியை உருவாக்காதீர்கள் என்று கூறியிருப்பதால் அதிமுக – பாஜக கூட்டணி இருக்கிறதா? இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு விரைவில் அதிமுக தலைமை மௌனம் கலைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Aiadmk bjp alliance questions l murugan sr balasubramaniyam mp jayakumar

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X