அதிமுக.வில் பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்து பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியது. இதற்கு எதிர்ப்பும் எழுந்திருக்கிறது.
அதிமுக.வில் பொதுச்செயலாளராக ஜெயலலிதா பதவி வகித்து வந்தார். அவரது மறைவுக்கு பிறகு இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலாவை அதிமுக பொதுக்குழு நியமனம் செய்தது.
அதிமுக பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள்தான் நியமிக்க வேண்டும் என்பது கட்சியின் சட்டதிட்ட விதியில் இருக்கிறது. இந்த விதியை மாற்றக்கூடாது என்றும் எம்.ஜி.ஆர். காலத்தில் உருவாக்கப்பட்ட ‘பைலா’ கூறுகிறது.
எனவே சசிகலா நியமனம் செல்லாது என முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிசாமி அப்போது தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தார். அப்போது சசிகலாவுக்கு எதிரான நிலை எடுத்த ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் இதே கருத்தை வலியுறுத்தினர்.
ஆனால் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் இணைப்புக்கு பிறகு கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளர் பதவியையே ரத்து செய்தனர். அதற்கு பதிலாக அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தையும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி க.பழனிசாமியையும் நியமனம் செய்தது அதிமுக பொதுக்குழு. இவர்கள் இருவரும் பொதுச்செயலாளருக்கான அதிகாரத்துடன் இயங்குவார்கள் என அறிவிக்கப்பட்டது.
அதிமுக.வின் அடிப்படை சட்டவிதியை மாற்றி இப்படி நியமனங்களை பொதுக்குழு செய்ய முடியுமா? என்கிற கேள்வி எழுந்தது. ஆனால் இந்த மாற்றத்தை அங்கீகரிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எழுதிய கடிதம், பொதுக்குழு தீர்மானம் ஆகியவற்றை இந்திய தேர்தல் ஆணையம் அதிமுக அமைப்பு விதிகள் தொடர்பான பகுதியில் வெளியிட்டிருக்கிறது.
இதன் மூலமாக இந்த மாற்றங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்டதாக கருதப்படுகிறது. எனினும் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்தோ, அதிமுக தரப்பில் இருந்தோ அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் வரவில்லை. ஆனால் இபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இதை தங்களுக்கு கிடைத்த வெற்றியாக கொண்டாடுகிறார்கள்.
இதற்கிடையே தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிசாமி தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ‘சசிகலாவை பொதுச்செயலாளராக நியமனம் செய்ததை எதிர்த்து நான் தாக்கல் செய்த முக்கியத்துவம் வாய்ந்த மனு தேர்தல் ஆணைய விசாரணையில் நிலுவையில் இருக்கிறது. அடிப்படை உறுப்பினர்கள் கூடி, பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்கிற அடிப்படை விதியை மாற்ற பொதுக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது.
இது தொடர்பான விசாரணைகள் தேர்தல் ஆணையத்திலும் டெல்லி உயர் நீதிமன்றத்திலும் நிலுவையில் இருக்கும்போது, பொதுச்செயலாளர் பதவி நீக்கத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க முடியாது. இதற்கு எனது ஆட்சேபனையை தெரிவிக்கிறேன். முறைப்படி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்’ என கூறியிருக்கிறார் கே.சி.பழனிசாமி.
ஓ.பன்னீர்செல்வம் அணியில் இடம் பெற்றிருந்த கே.சி.பழனிசாமி, பிறகு ஓ.பி.எஸ்.-இபிஎஸ் ஓருங்கிணைந்த அணியில் செய்தி தொடர்பாளராக இருந்தார். ‘காவிரி பிரச்னையில் மத்திய அரசு தமிழக உரிமையை மதித்து வாரியம் அமைக்காவிட்டால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து யோசிப்போம்’ என கூறியதற்காக இவரை கட்சியைவிட்டு ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் நீக்கியது குறிப்பிடத்தக்கது.