பா.ஜ.க ஐ.டி விங் நிர்வாகிகள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது குற்றச்சாட்டுகளை வைத்து கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்ததைத் தொடர்ந்து, கோவில்பட்டியில் பா.ஜ.க-வினர் இ.பி.எஸ் உருவபொம்மை எரித்து கண்டனம் தெரிவித்த பரபரப்பு அடங்குவதற்குள், மதுரையில் அ.தி.மு.க தொண்டர்கள் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க-வில் இணைந்துள்ளனர். இந்த நிகழ்வுகள் பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
பா.ஜ.க ஐ.டி. விங் மாநிலத் தலைவர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் ஐ.டி. விங் மாநில செயலாளர் திலீப் கண்ணன் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதையடுத்து இருவரும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தனர்.
அ.தி.மு.க, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறபோது, மாநில பா.ஜ.க தலைமை மீது விமர்சனங்களை வைத்துவிட்டு வெளியேறும் நிர்வாகிகளை அ.தி.மு.க-வில் இணைத்துக்கொள்வது கூட்டணி தர்மத்தை மீறும் செயல் என்று பா.ஜ.க-வினர் பலரும் சமூக ஊடகங்களை குரல் எழுப்பினர்.
பா.ஜ.க-வில் இருந்து விலகிய நிர்வாகிகளை அ.தி.மு.க-வில் இணைத்துக்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில்பட்டியில் பா.ஜ.க இளைஞரணியினர் எடப்பாடி பழனிசாமி உருவப் படத்தை எரித்து கண்டனம் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து சுவரொட்டிகளையும் கோவில்பட்டியில் ஒட்டியிருந்தனர்.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அதிரடியான முடிவுகளை எடுப்பேன். பா.ஜ.க-வில் இருந்து நிர்வாகிகளை இணத்துக்கொள்ளும் அளவுக்கு பா.ஜ.க வளர்ந்திருக்கிறது என்று கூறினார்.
மேலும், பா.ஜ.க தொண்டர்கள் யாரும் உணர்ச்சிவசப்படக் கூடாது. தார்மீக அடிப்படையில், கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் அ.தி.மு.க தொண்டர்கள் பா.ஜ.க-வில் இணைந்தனர்.
கட்சியில் இருந்து விலகிய பா.ஜ.க நிர்வாகிகளை அ.தி.மு.க-வில் இணைத்துக்கொண்டதற்கு, பா.ஜ.க-வினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அ.தி.மு.க தொண்டர்களை பா.ஜ.க-வில் இணைத்திருப்பது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-வுக்கு எதிர்வினையாகவே பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, தேனி பெரியகுளம் சென்று ஓ.பி.எஸ்-ஐ சந்தித்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை , ஓ.பி.எஸ் தயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார். அண்ணாமலை – ஓ.பி.எஸ் சந்திப்பும் கவனம் பெற்றுள்ளது.
பா.ஜ.க – அ.தி.மு.க இடையே நடைபெற்ற அடுத்தடுத்த நிகழ்வுகளால், பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், கூட்டணிக்குள் ஒரு சலசலப்பு உருவாகியுள்ளது தெளிவாகத் தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“