சட்டமன்றத்தில் தைரியமாக ஆண்மையோடு, முதுகெலும்போடு பேசக்கூடிய அதிமுக எம்.எல்.ஏ.க்களை நாம் பார்க்க முடியவில்லை என்று பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் கூட்டாக புகார் அளித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மாணவியை பள்ளியில் மதமாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால்தான் தற்கொலை செய்துகொண்டார். அவருடைய மரணத்துக்கு நீதி கேட்டு பாஜகவினர் நேற்று சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கலந்துகொண்ட பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், ஹெச். ராஜா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த இந்த போராட்டத்தில் பேசிய பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், தமிழ்நாட்டில் அதிமுக எதிர்க்கட்சி போல செயல்படவில்லை. பாஜக எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும் கூட துணிந்து கேள்வி எழுப்புகிறது. பாஜக தலைவர் அண்ணாமலை அச்சமின்றி கேள்வி எழுப்பி வருகிறார். சட்டமன்றத்தில் தைரியமாக ஆண்மையோடு, முதுகெலும்போடு பேசக்கூடிய அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட நாம் பார்க்க முடியவில்லை என்று கூறினார்.
தஞ்சாவூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் அதிமுக எந்த கருத்தும் தெரிவிக்காததால் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்திருந்தார்.
சட்டமன்றத்தி ஆண்மையோடு பேசக்கூடிய ஒரு அதிமுக எம்.எல்.ஏ.கூட இல்லை என்ற நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு அதிமுக நிர்வாகிகள் பலரும் சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அதிமுக ஐ.டி. விங் மதுரை மண்டல செயலாளர் ராஜ் சத்யன், அண்ணன் நயினார் நாகேந்திரனுக்கு உண்மையில் ஆண்மை இருந்தால் அதிமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்ற எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று ஆண்மையை நிரூபிக்கட்டும் என்று சவால் விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன், அதிமுக பற்றிய தன்னுடைய பேச்சுகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அதிமுக பற்றிய தன்னுடைய கருத்துக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்று விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் கூட்டாக புகார் அளித்துள்ளனர்.
சென்னை கொளத்தூர் அதிமுக நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கொளத்தூர் அதிமுக நிர்வாகிகள் கூட்டாக சென்று சென்னை K5 பெரவள்ளூர் காவல் நிலையத்தில் உதவி ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளனர். பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் அதிமுக நிர்வாகிகளை பொது இடத்தில் தவறாக பேசியதாகவும் அவர் மீது மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரி புகார் அளித்தனர். இதனால், அதிமுக – பாஜகவினர் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“