எடப்பாடி பழனிசாமிக்கு நான் தூது அனுப்பியதாக கூறுவது வடிகட்டிய பொய். நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க ஆதரவு இன்றி அ.தி.மு.கவால் வெற்றி பெற முடியாது என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள நேற்று இரவு (நவ.15) ஈரோடு வந்த ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "நாங்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் சேர்வதாக கூறி வருவது முற்றிலும் தவறு. அதுபோன்ற எண்ணமும் இல்லை, வாய்ப்பும் இல்லை. நான் ஏற்கனவே கட்சி ஒன்றுபட்டால் தான் வெற்றி அடைய முடியும் என்று சொல்லிவிட்டேன். அதை அவர்கள் கேட்பதாக இல்லை. அவர்கள் பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டார்கள்.
எங்கள் நிலை பற்றி, தேர்தல் அறிவித்ததும் நல்ல முடிவை வெளியிடுவோம். தற்போது டி.டி.வி.தினகரனுடன் இணைந்து தேர்தல் பணிகளை செய்து வருகிறோம். சசிகலா அரசியலுக்கு வருவது குறித்து அவர்தான் அறிவிக்க வேண்டும். சசிகலா எங்களுடன் வருவது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் எப்படி இருக்க வேண்டும், செயல்பட வேண்டும் என மக்கள் நினைக்கிறார்களோ, அப்படி செயல்படுவோம். நான் எடப்பாடி பழனிசாமி உடன் இணைவதற்காக தூதுவிடுவதாக கூறுவது, வடிகட்டிய பொய்.
தற்போது தனித்து நிற்பதாக கூறி வரும் எடப்படி பழனிசாமியால், நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க இல்லாமல் வெற்றி பெற முடியாது. தன்னை கூட்டணிக்கு வரும்படி எடப்பாடி பழனிசாமி அழைத்ததாக சீமான் கூறியுள்ளார். சீமான் பொய் சொல்ல மாட்டார் என நினைக்கிறேன். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மோசமாக உள்ளது" என்று ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“