அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட 84 பக்க தீர்ப்பில் 2 பாயிண்ட்கள் மட்டும் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக உள்ளன. ஐகோர்ட் தீர்ப்பில் கூறியது என்ன?
அ.தி.மு.க தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் முடிவுக்கு வந்துள்ளது. அ.தி.மு.க பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளராக நியமனம், ஓ.பி.எஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கியது ஆகிய தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக வந்த நிலையில், பொதுக்குழு தீர்மானம் மற்றும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பளித்தார்.
நீதிபதி குமரேஷ் பாபு பிறப்பித்த தீர்ப்பில், அ.தி.மு.க பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டுவந்த தீர்மானமும் இடைக்கால பொதுச் செயலாளரை நியமித்த தீர்மானங்களும் செல்லும் என்று தீர்பளித்துள்ளார்.
நீதிபதி குமரேஷ் பாபு பிறப்பித்த 85 பக்கத் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
சிறப்பு தீர்மானத்துக்கு இடைக்கால தடை விதித்தால் அது கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் என்பதால் தடை விதிக்க முடியாது.
தீர்மானங்களுக்கு தடை விதித்தால், மீண்டும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் கட்சியை நிர்வகிக்க வேண்டி வரும்.
இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதால் கட்சி செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்படும்.
பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதித்தால் வழிநடத்த தலைவர் இல்லாமல் கட்சி பெரிதும் பாதிக்கப்படும்.
தடை விதித்தால் அது 1.5 கோடி உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்துவதுடன் கட்சியின் செயல்பாட்டையும் பாதிக்கும் எனவே தீர்மானத்துக்கு தடை விதிக்க முடியாது. தீர்மானம் செல்லும் என்று தீர்ப்பளித்தார்.
மேலும், ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் கட்சியில் இருந்து நீக்கியது தொடர்பான சிறப்பு தீர்மானத்தைப் பொறுத்தவரை பிரதான வழக்கில்தான் தீர்மானிக்க முடியும். அவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் கொடுக்கப்பட வேண்டும் என்ற விதி மீறப்பட்டிருக்கிறது என்ற போதிலும்கூட, சிறப்பு தீர்மானத்திற்கு தடை விதித்தால் அது கட்சிக்கு ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பை ஏற்படுத்தும் அதனால் தடை விதிக்க முடியாது என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
கட்சியின் அடிப்படை கட்டமைப்புக்கு மாறக திருத்தம் கொண்டுவரப்பட்டதாக ஓ.பி.எஸ் தரப்பு வைத்த வாதத்தை ஏற்க முடியாது; மேலும், எந்த அதிகாரமும் இல்லாமல் ஜூலை 11-ல் பொதுக்குழு கூட்டப்பட்டதால் தீர்மானங்கள் அடிப்படை முகாந்திரம் அற்றவை என்ற ஓ.பி.எஸ் தரப்பு வாதத்தை நிராகரிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
ஜூலை 11-ம் தேதி கூடிய அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் பொதுக்குழு தீர்மானங்களும் செல்லுபடியாகக் கூடியவையே என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதித்தால் வழிநடத்த தலைவர் இல்லாமல் கட்சி பெரிதும் பாதிக்கப்படும் என்று நீதிபதி தடை விதிக்க மறுத்துள்ளதாகக் கூறியுள்ளதால், இந்த தீர்ப்பை எதிர்த்து நாளை மேல்முறையீட்டு விசாரணையில், இதை ஓ.பி.எஸ் தரப்பு குறிப்பிட்டலாம் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.