தப்பித்தவறி மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்துவிட்டால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்றும், இதை நான் எதிர்க்கட்சி தலைவராக இருந்து பேசவில்லை, முன்னாள் முதலமைச்சராக பேசவில்லை, சாதாரண விவசாயி என்ற முறையில் பேசுவதாக தஞ்சையில் எடப்பாடி பழனிசாமி காட்டமாக பேசினார்.
சர்வதேச நதிநீர் பங்கீடு கொள்கையின்படி நதியின் கீழ்ப் பகுதியில் இருக்கும் மாநிலங்களுக்கே நதிநீரின் பங்கீட்டில் அதிக உரிமை உள்ளது. 222 கிலோமீட்டர் தூரம் தமிழ்நாட்டில் செல்லும் பாலாற்று நீரை, வெறும் 33 கிலோமீட்டர்களுக்கு பாலாறு நீர்வழியைக் கொண்டிருக்கும் ஆந்திர மாநிலம் ஏற்கனவே 22 தடுப்பணைகள் கொண்டு தடுத்திருக்கும் நிலையில், தற்போது மீண்டும் தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டியுள்ளது.
இதனை உரிமையோடு நின்று குரல் கொடுத்து தடுக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, இந்த விடியா திமுக ஆட்சியில் மேகதாது விவகாரத்தில் மவுனியாக இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்தது போலவே பாலாறு விவகாரத்திலும் செயலற்ற நிலையில் இருக்கிறது. மீண்டும் தப்பித்தவறி தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது.
இதை நான் அண்ணா தி.மு.க.வின் பொதுச் செயலாளராக இருந்து பேசவில்லை, எதிர்க்கட்சி தலைவராக இருந்து பேசவில்லை, முன்னாள் முதல்-அமைச்சராக பேசவில்லை. சாதாரண விவசாயி என்ற முறையில் என் மனதில் பட்டதை வெளிப்படுத்துகிறேன்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி தாருங்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள். உங்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கபட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததால், மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்க முடியாத நிலை உருவானது. காவிரிப் பிரச்சினைக்கு சட்டப் போராட்டம் நடத்தி,நிலையான தீர்ப்பை பெற்றுத் தந்ததும் அ.தி.மு.க.தான்.
ஆண்டுதோறும் வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசிடமிருந்து கேட்டுப் பெற தி.மு.க அரசுக்கு திராணி இல்லை. கர்நாடகாவில் காங்கிரஸ், பா.ஜ.க என யார் ஆட்சிக்கு வந்தாலும், தமிழகத்தை வஞ்சிக்கின்றனர்.
அ.தி.மு.க ஆட்சியில் இருக்கும்வரை, காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேகேதாட்டு குறித்து பேசவில்லை. அண்மையில் நடைபெற்ற ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணை கட்டுவது குறித்த தீர்மானம் வந்தபோது, தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்திருக்க வேண்டும். ஆனால், வாக்கெடுப்பில் கலந்துகொண்டு தோல்வியுற்று, பிரச்சினையை உருவாக்கிவிட்டனர்.
ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் அனுமதிக்கொடுத்தால், டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். தி.மு.க ஆட்சியில் விவசாயிகளுக்கு பயன்எதுவுமில்லை.
இந்த போராட்டத்தில், தஞ்சை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“