தமிழ்நாட்டில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய தி.மு.க அரசைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மார்ச் 12-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ‘தி.மு.க-வும் போதையும் வேண்டாம் எனச் சொல்லுங்கள்’ என்ற போராட்ட முழக்கத்தை அ.தி.மு.க தலைவர்கள் தங்கள் எக்ஸ் பக்கத்தில் சேர்த்துள்ளனர்.
தி.மு.க-வின் அயலக அணி நிர்வாகியாக இருந்த ஜாஃபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜெய்பூரில் கைது செய்யப்பட்டார். தி.மு.க ஜாஃபர் சாதிக்கை கட்சியில் இருந்து நடவடிக்கை எடுத்திருந்தாலும், தி.மு.க அரசு தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன.
மகளிர் தினத்தை முன்னிட்டு, அ.தி.மு.க பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிசாமி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி மாலை அணிவித்து, மலர்தூவிமரியாதை செலுத்தினார். பின்னர்கேக் வெட்டி, நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வழங்கினார். ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தி.மு.க பதவியேற்ற நாளில் இருந்து சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழகம் போதை பொருட்களின் தலைநகரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிகிறது. போதை பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான தி.மு.க அரசை கண்டித்தும், போதை பொருள் புழக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் அ.தி.மு.க சார்பில் மார்ச் 12-ம் தேதி காலை 10 மணிக்கு மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும். ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப்படும்.” என்று கூறினார்.
மேலும், “போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய தி.மு.க நிர்வாகி ஜாபர் சாதிக், முதல்வர் குடும்பத்துடன் நெருக்கமாக உள்ளார். டி.ஜி.பி.யிடம் பரிசு பெறுகிறார். இது கண்டிக்கத்தக்கது. ஜாபர்சாதிக் தொடர்புடைய அனைவரையும் விசாரிக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்.” என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வேலுமணி உள்ளிட்ட அ.தி.மு.க தலைவர்கள், எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், தங்கள் பெயர்களுடன் ‘தி.மு.க-வும் போதையும் வேண்டாம் எனச் சொல்லுங்கள்’ எனும் பொருளில், “Say No To Drugs & DMK” என்ற போராட்ட முழக்கத்தை சேர்த்துள்ளனர்.
மாநிலத்தில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய தி.மு.க அரசைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மார்ச் 12-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ‘தி.மு.க-வும் போதையும் வேண்டாம் எனச் சொல்லுங்கள்’ என்ற வாசகத்தை அ.தி.மு.க தலைவர்கள் எக்ஸ் பக்கத்தில் தங்கள் பெயருடன் சேர்த்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“