அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தை கோயம்புத்தூரில் உள்ள கட்சியின் கோட்டையில் இருந்து நேற்று (ஜூலை 7) தொடங்கினார். 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பல கட்டங்களாக பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது. ஆளும் தி.மு.க. மற்றும் நடிகர் விஜய்யின் புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக உத்வேகத்தை உருவாக்கவும், அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமையைப் பலப்படுத்தவும் எடப்பாடி பழனிசாமி நோக்கம் கொண்டுள்ளார்.
பிரத்யேக பேருந்தில் மாநிலம் முழுவதும் பயணிக்கும் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுடன் உணவருந்தி, அவர்களது வீடுகளில் தங்கி கலந்துரையாடவுள்ளார். பிரச்சாரத்தின் முதல்நாளான நேற்று, தெக்கம்பட்டி விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுடன் உரையாடிய இ.பி.எஸ்., அத்திக்கடவு-அவினாசி பாசனத் திட்டத்தை விரிவாக்குவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். கடந்தாண்டு மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, கட்சியின் அடித்தளத்தை மீண்டும் பலப்படுத்துவதே இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் என்று அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரப் பயணம் தொடங்கியுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி நிலவும் ஒருங்கிணைப்பு இல்லாத போக்கும், பரஸ்பர அவநம்பிக்கையும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பா.ஜ.க-அ.தி.மு.க. மீண்டும் கூட்டணி அமைத்த 2.5 மாதங்களுக்குப் பிறகு இந்த பிரச்சாரம் தொடங்குகிறது.
நேற்று நடந்த பழனிசாமியின் பிரச்சாரப் பேரணியில் முன்னாள் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொள்ளாதது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சர் எல். முருகன், வானதி சீனிவாசன் மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட போதிலும், கூட்டணிக்கு முன்பு அதிமுகவுக்கு எதிராக கடுமையாகப் பேசிய அண்ணாமலை விலகியே இருந்தார். அண்ணாமலை, தனது சொந்தத் தொகுதியான கரூரில் மட்டுமே இ.பி.எஸ். பிரச்சாரத்தில் ஒரு symbolic ஆன முறையில் கலந்துகொள்வார் என்று பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மற்ற கூட்டணிக் கட்சிகளும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன. அ.தி.மு.க.வின் அதிருப்தி தலைவர்களான டி.டி.வி. தினகரன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இ.பி.எஸ். பேரணியில் பங்கேற்கவில்லை. மற்றொரு கூட்டணிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி அதன் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே உள்ள உட்கட்சிப் பூசலில் சிக்கி உள்ளது. ராஜ்யசபா இடத்தை உறுதியளிக்கப்பட்ட விஜயகாந்தின் தேமுதிக, "காத்திருந்து கவனிப்போம்" என்ற அணுகுமுறையைப் பின்பற்றுகிறது.
தி.மு.க.வின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, மேட்டுப்பாளையத்தில் நடந்த பேரணியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "1990களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒரு பகுதியாக இருந்தது தி.மு.க. என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மத்தியில் ஆட்சியைப் பகிர்ந்து கொண்டபோது மாநிலத்திற்காக அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் நாட்டைச் சுரண்டி, இப்போது எங்கள் பா.ஜ.க. கூட்டணியைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள்" என்று சாடினார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. தி.மு.க.வும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தங்கள் பணிகளைத் தொடங்கிவிட்ட நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தனது பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளார். திமுக, "ஒரணியில் தமிழ்நாடு" என்ற பெயரில் வீடு வீடாகச் சென்று பூத் அளவில் 30% வாக்காளர்களைச் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. அதேசமயம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் "உடன்பிறப்பே வா" என்ற உட்கட்சித் தொடர்பு திட்டத்தை தொடங்கி, 11 நாட்களில் 33 தொகுதிகளை உள்ளடக்கியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் தனது உறுப்பினர் சேர்க்கை மூலம் அமைதியாக அடிமட்ட அளவில் தனது இருப்பை வலுப்படுத்தி வருகிறது. விஜய் ஆகஸ்ட் மாதம் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "நாங்கள் குறைந்தபட்சம் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க.வை விட அதிக வாக்குகளைப் பெற்று, குறைந்தது 15% வாக்கு சதவீதத்துடன் 3-வது அணியாக உருவெடுப்போம்" என்று த.வெ.க. வட்டாரம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
விஜய்யுடன் கூட்டணிக்குத் தயாராக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி சூசகமாகத் தெரிவித்துள்ளார். "திமுக எதிர்ப்பு" சக்திகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், 3 முக்கிய அ.தி.மு.க. தலைவர்கள் முன்னதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்ததாவது, விஜய்யின் ஆரம்பகால அணுகுமுறைகளுக்கு அ.தி.மு.க. பதிலளிக்கவில்லை. இதற்கு காரணம், "த.வெ.க-வை அ.தி.மு.க.வுடன் சமமாக நடத்த வேண்டும் என்று விஜய் கோரினார்" என்று மேற்கு தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறினார்.