தமிழகத்தில் வருகிற 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் சர்ச்சையாகி உள்ள நிலையில், அதிமுக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் மாறுப்பட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வருகிற 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், ஆளும் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் உருவாகியுள்ளது. அமைச்சர்கள் சிலர் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்றும் சிலர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்தான் முதல்வர் வேட்பாளர் என்றும் கருத்து தெரிவித்தனர். சமீபத்தில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில், முதல்வர் வேட்பாளர் யார் என்று முதல்வர் ஈ.பி.எஸ் மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் இடையே விவாதம் நடைபெற்றதாகவும், இதையடுத்து, அக்டோபர் 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாள கே.பி.பழனிசாமி கூறினார்.
இந்த நிலையில், திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கள் சீனிவாசன், “எந்த போட்டி இல்லை. பிரச்னை இல்லை. 7ம் தேதி முறைப்படி முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள். எந்த போட்டியும் இல்லை. பிரச்னையும் இல்லை. அருமையான ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. மக்களைத் தேடி எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்கிறோம். சிலசிலச் பிரச்னைகள் இருக்கும். அதை எல்லாம் பார்த்துவிடுவோம். அடுத்த ஆட்சி அதிமுகவுடையதுதான். அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான்” என்று கூறினார்.
முதலமைச்சர் பழனிசாமி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பி.எஸ் வரவில்லை ஏன் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அவர்களுக்கு ஏதேனும் வேலை இருந்திருக்கலாம். அதனால், கலந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம் என்று கூறினார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என்று கூறிய செய்தி ஊடகங்களில் வெளியாகி அதிமுகவில் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் சீனிவாசன் கருத்துக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், வெல்லமண்டி நடராஜன், அதிமுகவைச் சேர்ந்த ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “திண்டுக்கல் அண்ணான் சீனிவாசனை நான் ரொம்ப மதிக்கிறேன். அவர் ரொம்ப மூத்த உறுப்பினர். அவருக்கு கட்சியினுடைய கட்டுப்பாடு தெரியும். அவர் மட்டுமல்ல, யாராக இருந்தாலும், ஏற்கெனவே, ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் யாரும் இது பற்றி பேசக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். செயற்குழுவிலும், 7ம் தேதி என்ற அளவில் அடிப்படையில் ஒரு கருத்து சொல்லப்பட்டு இருக்கிறது. இதில் ஏதாவது பிரச்னை ஏற்படுமா என்று எதிரிகள், துரோகிகள், எல்லாம் பூதக்கண்ணாடி வைத்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு நாம் எந்த வகையிலும் இடம் கொடுக்க கூடாது” என்று கூறினார்.
அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தது குறித்து கருத்து கருத்து தெரிவித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திண்டுக்கல் சீனிவாசன் கூறியது அவரது சொந்த கருத்து, அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும் என தெரிவித்தார். மேலும், சசிகலாவை கட்சியில் இணைப்பது பற்றி கட்சியின் தலைமை தான் முடிவெடுக்கும் என்றும் கட்சிக்குள்ளே வாதப் பிரதிவாதங்கள் ஏற்படுவது இயற்கை தான் என்றும் அவர் கூறினார்.
அதே போல, அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், ஜேசி.டி பிரபாகர் கூறுகையில், “மூத்த உறுப்பினர், வரலாறு தெரிந்தவர். பல்வேறு பொறுப்புகளை கட்சியிலே இருந்து பார்த்தவர். அவர் இந்த நேரத்தில் இப்படிபட்ட கருத்தை வெளியிடுவதைத் தவறு என்று நான் கருதுகிறேன். கட்சியினுடைய தலைமை ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் ஏற்கெனவே அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். கட்சியினுடைய முதலமைச்சர் யார் என்று யாரும் அறிக்கை வெளியிடக் கூடாது; பேட்டிகள் அளிக்கக் கூடாது என்று தெளிவாக அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். நான் கட்சிக்கு கட்டுப்பட்டவன் இதற்கு மேல் அதைப் பற்றி ஏதும் சொல்ல விரும்பவில்லை.” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.