Advertisment

5 தொகுதிகள்... தமிழகத்தில் அ.தி.மு.க அதீத கவனம் செலுத்தும் தொகுதிகள் இவை!

அ.தி.மு.க தனிப்பெரும் தலைமைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும், அவரது தலைமையிலான அ.தி.மு.க-வுக்கும் இந்த மக்களவைத் தேர்தலில் நிரூபித்தாக வேண்டிய பல நிர்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
EPS 1

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி photo: x/ @AIADMKOfficial

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சந்தித்த தேர்தல்களில் எல்லாம் தொடர் தோல்விகளையே சந்தித்து வரும் அ.தி.மு.க, இந்த மக்களவைத் தேர்தலில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

Advertisment

2017-ம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே. நகர், இடைத் தேர்தல், 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல், 2020 உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க தோல்விகளையே சந்தித்தது. அதே நேரத்தில், 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் நடைபெற்ற இடைத் தேர்தலில் கனிசமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது.

அதே நேரத்தில், இந்த 9 ஆண்டுகளில் அ.தி.மு.க-வில் என்னென்னவோ நடந்துவிட்டது. ஜெயலலிதா மறைவு, ஓ. பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாக முதல்வர், சசிகலா முதல்வராக முயற்சி, ஓ.பி.எஸ் தர்மயுத்தம், சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு சிறை சென்ற சசிகலா, முதல்வரான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க-வைக் கைப்பற்ற டி.டி.வி தினகரன், அ.தி.மு.க சின்னம் முடக்கம், ஆர்.கே. நகர் தேர்தலில் டி.டி.வி தினகரன் வெற்றி, ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைந்தனர், சசிகலா குடும்பத்தினர் அ.தி.மு.க-வி இருந்து நீக்கம், அ.ம.மு.க-வைத் தொடங்கிய டி.டி.வி. தினகரன், 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி, தேனி தொகுதியைத் தவிர அனைத்து தொகுதிகளிலும் தோல்வி, சசிகலா தண்டனை காலம் முடிந்து விடுதலை, தேர்தலில் விலகி இருந்த சசிகலா, 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வி, எதிர்க்கட்சித் தலைவரான இ.பி.எஸ்., கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டப்பட்ட ஓ.பி.எஸ்., அ.தி.மு.க பொதுக்குழுவில் ஓ.பி.எஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம், அனைத்து சட்டப் போராட்டங்களிலும் தோல்வி அடைந்த ஓ.பி.எஸ், பா.ஜ.க-வுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அ.தி.மு.க, 2024 மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் போட்டி, பா.ஜ.க கூட்டணியில் ராமநாதபுரத்தில் ஓ.பி.எஸ் போட்டி என பல நிகழ்வுகளை சந்தித்துவிட்டது.

அ.தி.மு.க தனிப்பெரும் தலைமைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும், அவரது தலைமையிலான அ.தி.மு.க-வுக்கும் இந்த மக்களவைத் தேர்தலில் பல நிர்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. முக்கியமாக, பா.ஜ.க கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் ஓ.பி.எஸ்-ஐ தோற்கடித்து செல்லாக்காசாக்க வேண்டும்,  இந்த 3 அண்டு கால ஆட்சியில், தி.மு.க-வுக்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் உருவாகி உள்ளது என்பதை, அ.தி.மு.க வெற்றியின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும், தமிழ்நாட்டில், அ.தி.மு.க-வுடன் இருந்தால்தான் பா.ஜ.க நான்கு இடமாவது வெற்றி பெற முடியும், இல்லாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை  பா.ஜ.க தேசியத் தலைமைக்கு உணர்த்த வேண்டும். கொங்கு பகுதி அ.தி.மு.க-வின் கோட்டை என்பதை நிரூபிக்க கோவையை கைப்பற்ற வேண்டும், தலைநகர் சென்னையில் ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயங்களும், அ.தி.மு.க-வுக்கு இந்த குறைந்தபட்ச இலக்குகளும் இந்த மக்களவைத் தேர்தலில் இந்த 5 தொகுதிகளில் அதீத கவணம் செலுத்தி வருகிறது.

இந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில், தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, பா.ஜ.க கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப் பதிவு நாளுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளன. இந்த மக்களவைத் தேர்தலில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இருப்பினும், அ.தி.மு.க இந்த மக்களவைத் தேர்தலில், கோவை, திருப்பூர், தென் சென்னை, சேலம், ராமநாதபுரம் ஆகிய 5 தொகுதிகளில்தான் அதிக கவனம் செலுத்துவதாக தெரியவந்துள்ளது.

கோவையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார் என்றதுமே தி.மு.க., அ.தி.மு.க என 2 கட்சிகளுக்கும் முக்கியமான தொகுதியாக மாறிவிட்டது. அண்ணாமலை தொடர்ந்து, தி.மு.க, அ.தி.மு.க ஆகிய 2 கட்சிகளையும் அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.  இதனால், அண்ணமலையை வீழ்த்த வேண்டும் என்ற தீவிரம் 2 கட்சிகள் இடையேயும் காணப்படுகிறது. அ.தி.மு.க கோவையில் அண்ணாமலைக்கு எதிராக சிங்கை ராமச்சந்திரனை வேட்பாளராக களமிறக்கியுள்ளது. அதே போல, தி.மு.க கோவை தொகுதியில் கணபதி ராஜ்குமாரை வேட்பாளராக களமிறக்கியுள்ளது. 

வேட்புமனு தாக்கல் முடிந்ததுமே அண்ணாமலைக்கும் சிங்கை ராமச்சந்திரனுக்கும் இடையேயான சர்ச்சை மோதல் தொடங்கிவிட்டது.  அண்ணாமலையை வீழ்த்தி, கொங்குமண்டலம் அ.தி.மு.க-வின் கோட்டை என்று நிரூபிக்க தீவிர முயற்சி செய்து வருகிறது.

திருப்பூர் தொகுதியில் அ.தி.மு.க பெரும் செல்வந்தரைக் களம் இறக்கி இருக்கிறது. திருப்பூர் அ.தி.மு.க வேட்பாளர் அருணாச்சலம் மிகப் பெரிய செல்வந்தர். இதனால், திருப்பூர் தொகுதியிலும் அ.தி.மு.க அதீத கவனம் செலுத்தி வருகிறது.

அதே போல, கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்  அ.தி.மு.க தேனியைச் தவிர அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியடைந்தது. அதற்கு பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்ததுதான் காரணம் என்று அ.தி.மு.க தலைவர்களே ஊடகங்களில் கூறினார்கள். அதனால், இந்த முறை பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறி போட்டியிடும் அ.தி.மு.க தலைநகர் சென்னையில் குறைந்தபட்சம் ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக தென் சென்னை தொகுதியை அ.தி.மு.க முக்கியமாக நினைக்கிறது. 

அ.தி.மு.க-வின் மூத்த தலைவர் டி.ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார். அதே நேரத்தில், தி.மு.க-வில் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் 2-வது முறையாக தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். பா.ஜ.க-வில் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் குதித்துள்ள தமிழிசை சௌந்தரராஜன் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார்.  இந்த தொகுதியிலும் அ.தி.மு.க அதீத கவனம் செலுத்தி வருகிறது.

அ.தி.மு.க அதிக கவனம் செலுத்தும் மற்றொரு தொகுதி என்றால் அது ராமநாதபுரம் தொகுதி. அ.தி.மு.க பா.ஜ.க உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு தனி கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறது. ஆனால், அ.தி.மு.க-வில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் அ.தி.மு.க-வை தொண்டர்கள் பலத்துடன் மீண்டும் மீட்டெடுப்பேன் என்று கூறி வருவதோடு தேர்தலில் பா.ஜ.க-வுக்கு முதல் ஆளாக ஆதரவு தெரிவித்து பா.ஜ.க கூட்டணியில் இணைந்தார். ஆனால், அவருக்கு அங்கே ராமநாதபுரம் ஒரு தொகுதி மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் பலாப்பழம் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். ஓ.பி.எஸ்-ஐத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க தீவிரமாக உள்ளது. வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக ஒ. பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 5 வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிடுகிறார்கள். இதிலும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களின் கை இருப்பதாகக் கூறப்படுகிறது. 

அதே நேரத்தில், ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க சார்பில் நவாஸ் கனி 2வது முறையாகப் போட்டியிடுகிறார். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு அ.தி.மு.க ராமநாதபுரம் தொகுதியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. 

அடுத்தது, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் தொகுதியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முயற்சியில் அ.தி.மு.க கவனம் செலுத்தி உள்ளது. இதன் மூலம், எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கை சொந்த மாவட்டத்தில் உறுதி செய்யும் முயற்சி நடந்து வருகிறது. சேலம் தொகுதியில், அ.தி.மு.க வேட்பாளராக ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் பி. விக்ணேஷ் போட்டியிடுகிறார். தி.மு.க-வில் அக்கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம். செல்வ கணபதி வேட்பாளராக போட்டியிடுகிறார். அதே போல, பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க-வில் இருந்து ந. அண்ணாதுரை போட்டியிடுகிறார். 

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊர் வருகிற சேலம் தொகுதியை எப்படியாவது வெற்றி கொள்ள வேண்டும் என்ற முனைப்பில், அ.தி.மு.க அதிக கவனம் செலுத்தி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment