தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக தனது கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிக, தமாகா ஆகிய கட்சி தலைவர்களுடன் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2 ஆம் தேதி அறிவித்தது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து, புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் இடஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அளித்த தீர்ப்பில், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்த தேர்தல் அட்டவணையைத் திரும்பப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிக, தமாகா கட்சி தலைவர்களுடன் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கே.டி.ராகவன், பாமக சார்பில் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, ஆர்.வேலு, தேமுதிகவைச் சேர்ந்த அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, தமாக சார்பில் ஞானதேசிகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய, பொன்.ராதாகிருஷ்ணன், “இன்றைக்கு இடஒதுக்கீடு பற்றியோ சதவீதங்கள் பற்றியோ பேசவில்லை. பொதுப்படையாக இந்த தேர்தலை எப்படி அணுகினால் சரியாக இருக்கும் என்று பேசினோம். பாஜக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் கலந்து பேசி அடுத்த கட்ட முடிவு எடுப்போம்.” என்று கூறினார்.
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் ஜி.கே.மணி, “உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக கூட்டணியில் போட்டியிடுவது குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசனை செய்தோம்” என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.